ADVERTISEMENT
IMAN Dubai

டேரா குவைத் பள்ளி: 45 ஆண்டுகாலத் தமிழர்களின் ‘அன்பு விருந்து’!

IMAN Dubai | துபாய் டேரா குவைத் பள்ளியில் ஈமான் கலாச்சார மையம் 1980 முதல் வழங்கி வரும் பிரம்மாண்ட ரமலான் இஃப்தார் கஞ்சி மற்றும் உணவின் சிறப்புகள்.


துபாய் டேராவின் பரபரப்பான தெருக்களில், மாலை நேரத்துச் சூரியன் மறையும் வேளையில் ஒருவித அமைதியும், அதே சமயம் ஒரு மாபெரும் ஒருமைப்பாடும் நிலவுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். குறிப்பாக, தமிழர்களால் ‘குவைத் பள்ளி’ என்று அன்போடு அழைக்கப்படும் மஸ்ஜித் அஹமத் அப்துல்லா லூத்தா (Masjid Ahmad Abdullah Lootah) வளாகத்தில் நிலவும் அந்தச் சூழல் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

அங்கே மதம் கடந்து, மொழி கடந்து, ஒரு மாபெரும் மனிதாபிமானச் சங்கிலி கோர்க்கப்படுகிறது. 1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை, இடைவிடாமல் துபாய் ஈமான் (IMAN) கலாச்சார மையம் இந்த (இஃப்தார்) அறப்பணியை முன்னின்று நடத்தி வருவதுதான் இதன் ஆகச்சிறந்த அம்சம்.

IMAN Dubai

IMAN Dubai | 1980 முதல் இன்றுவரை: ஒரு தொடர் பயணம்

எந்த ஒரு சேவையும் ஒரு வருடம் அல்லது ஐந்து வருடம் செய்வது எளிது. ஆனால், சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு துல்லியமான நிர்வாகத்துடன், ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்குவது என்பது சாதாரண விஷயமல்ல. 1980-களில் ஒரு சிறிய அளவில் தொடங்கிய இந்த இஃப்தார் சேவை, இன்று ஈமான் கலாச்சார மையத்தின் அடையாளமாகவே மாறிவிட்டது.

இந்த நிகழ்வின் மகத்துவத்தை அறிந்து, ரமலான் காலங்களில் அமீரகம் வரும் தமிழகத்தின் முக்கியப் பிரமுகர்கள், சமூக சேவையாளர்கள், அறிஞர்கள் எனப் பலரும் இதில் நேரில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். “ஊர்ல பெரிய மனிதர்களா இருக்கறவங்க கூட, இங்க வந்து சாதாரண மக்களோட உட்கார்ந்து நோன்பு கஞ்சி குடிக்கிறது ஒரு நெகிழ்ச்சியான காட்சி” என அங்கிருக்கும் தன்னார்வலர்கள் பெருமிதத்தோடு கூறுகின்றனர்.

ADVERTISEMENT

நிர்வாகத் திறமையும் அர்ப்பணிப்பும்

இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை எவ்வித சலசலப்பும் இன்றி கையாள்வதற்குப் பின்னால் ஒரு வலுவான தலைமை இருக்கிறது. இந்த ஆண்டும், ஈமான் (IMAN Dubai) மையத்தின் தலைவர் அல்ஹாஜ் PSM ஹபீபுல்லா கான் அவர்களின் சீரிய வழிகாட்டுதலில், பொதுச் செயலாளர் ஹமீது யாசின் அவர்களின் தலைமையிலும் இந்தச் சேவைகள் மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

நிர்வாகக் குழுவினர் மற்றும் தங்களின் நேரத்தைப் பொருட்படுத்தாது களத்தில் இறங்கிச் செயல்படும் அர்ப்பணிப்பு மிக்க தன்னார்வலர்கள் (Volunteers) இணைந்து, ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்வை ஒரு திருவிழாவைப் போலக் கட்டுக்கோப்பாக நடத்தி வருகின்றனர். உணவுத் தயாரிப்பு முதல், தரை விரிப்புகளை விரிப்பது வரை, மக்கள் அமருவதை முறைப்படுத்துவது வரை அனைத்தும் கட்டுக்கோப்புடன் நடக்கும்.

IMAN Dubai

தினமும் 4000 பேருக்கு ‘அன்புச் சாப்பாடு’

ரமலான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 4000-க்கும் அதிகமான நபர்களுக்கு இங்கே இஃப்தார் உணவு வழங்கப்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அங்கே வருபவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று இந்தியாவின் பல மாநில மக்களும் கலந்து கொள்கின்றனர். பங்களாதேஷ், பாகிஸ்தான், சூடான் என்று வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டு பயனடைகின்றனர்.

இந்த ஆண்டு வழங்கப்படும் உணவின் பட்டியல்:

  • நோன்பு கஞ்சி: தமிழர்களின் கைமணத்தில் தயாரிக்கப்படும் அந்தச் சுவையான கஞ்சிதான் இஃப்தாரின் ‘ஹீரோ’. ஆம் பிரத்யேக நோன்பு கஞ்சி. இதற்காகவே தமிழர்கள் அமீரகத்தின் பல இடங்களில் இங்கே வருகின்றனர். தினமும் இல்லையென்றாலும் விடுமுறை தினங்களில் கலந்து கொள்கின்றனர்.
  • பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீர்: நோன்பு துறப்பதற்கான அடிப்படைத் தேவை.
  • ஆரஞ்சு பழம்: உடலுக்கு உடனடிப் புத்துணர்ச்சி தரக்கூடியது.
  • சமோசா: மாலை நேரத்துச் சுவைக்காகச் சேர்க்கப்படும் பலகாரம்.

சமூகப் பணிகளின் சங்கமம்

ஈமான் கலாச்சார மையம் என்பது ரமலான் கால சேவையோடு நின்றுவிடுவதில்லை. மதம் கடந்து மொழி கடந்து பல சேவைகள் செய்து வருகிறார்கள். அவர்கள் இதர காலங்களில் செய்யும் சில முக்கியப் பணிகள்:

ADVERTISEMENT
  1. மருத்துவ உதவி: ஏழைத் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள்.
  2. சட்ட உதவி: தாயகம் திரும்ப விரும்பும் தொழிலாளர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகள்.
  3. கல்விப் பணி: பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் மொழி மற்றும் இதர கல்விப் போட்டிகள்.
  4. இறுதிச் சடங்கு உதவிகள்: அமீரகத்தில் இறப்பவர்களின் உடல்களைத் தாயகம் அனுப்பும் மிகப்பெரிய பொறுப்பை இவர்கள் ஏற்றுச் செய்கிறார்கள்.

இருப்பினும், இவர்களின் அனைத்துப் பணிகளுக்கும் ஒரு மிகப்பெரிய ‘ஆத்மார்த்தமான’ தொடக்கமாக அமைவது இந்த ரமலான் இஃப்தார் சேவை என்றால் அது மிகையாகாது என்றே நினைக்கிறேன்.

துபாய் டேராவின் குவைத் பள்ளி வளாகம் என்பது வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல; அது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இஃப்தார் வழங்கி வரும் மையம். 1980 முதல் இன்றுவரை மஸ்ஜித் அஹமத் அப்துல்லா லூத்தாவின் சார்பாக ஈமான் கலாச்சார மையம் செய்து வரும் இந்தச் சேவை என்று பாராட்டுக்குரியதே. இந்தத் தமிழர்களின் அமைப்பைக் கொண்டாடுவது நமது கடமையும் கூட.

படங்கள்: ஈமான் பேஸ்புக் பக்கம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *