செல்போன் ஆசையால் சிறுவனை கொன்ற வாலிபர் கைது. Youth arrested for killing boy
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் அன்புகுமார் (வயது 11). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 28-ந் தேதி அன்புகுமார் தனது நண்பர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றான். பின்னர் அவன் வீட்டிற்கு வரவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அன்புகுமார் கிடைக்கவில்லை. இந்நிலையில் அங்குள்ள கல்லாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் அன்புகுமார் பிணமாக மிதந்தான்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெற்றோர், சிறுவனின் உடலை தண்ணீரில் இருந்து மீட்டனர். அப்போது சிறுவனின் வாய் மற்றும் கைகளில் காயம் இருந்ததால், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், யாரோ அவனை அடித்துக் கொலை செய்து விட்டனர் என்றும் அசோக்குமார் வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அன்புகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை யாரேனும் கொலை செய்துள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். இதில் அன்புகுமாரை, வி.களத்தூர் ராயப்பா நகரை சேர்ந்த தர்மலிங்கம் மகன் தனுஷ் (19) கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அன்புகுமார் வைத்திருந்த செல்போனுக்கு ஆசைப்பட்டு, செல்போனில் ‘கேம்’ ஏற்றி தருவதாக கூறி அன்புகுமாரை, தனுஷ் அழைத்து சென்றுள்ளார். பின்னர் கல்லாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் அமுக்கி அன்புகுமாரை கொலை செய்துவிட்டு, அன்புகுமார் வைத்திருந்த செல்போனை தனுஷ் எடுத்துச்சென்றதும், விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார், தனுஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
keywords: Youth arrested, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.