பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மகளிர் தின விழா. Women’s Day Celebration
பெண்ணின் மகத்துவத்தினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந்தேதி உலக மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் பெண்கள் உயா்ந்த பதவிகளை வகித்து வருகின்றனர். குறிப்பாக முதன்மை அமர்வு நீதிபதியாக சுபாதேவி, மாவட்ட கலெக்டராக ஸ்ரீவெங்கடபிரியா, போலீஸ் சூப்பிரண்டாக நிஷா பார்த்திபன், பெரம்பலூர் வருவாய் கோட்ட சப்-கலெக்டராக பத்மஜா உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தாலுகா அலுவலகங்கள், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஒரு சில தனியார் பள்ளி, கல்லூரிகளில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் அனைவரும் ஒரே நிறத்திலான புடவைகளை அணிந்து வந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர். முன்னதாக கலெக்டர் அலுவலக பெண் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது தோழிகளுக்கு செல்போனில் வாட்ஸ் அப் மூலம் வாழ்த்துக்கள், கவிதைகளை பகிர்ந்தனர். பலர் தங்களது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக கவிதை, திரைப்பட பாடல்களை வைத்திருந்தனர்.
வெற்றியின் அடையாளம்
பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மகளிர் தின விழா முதன்மை அமர்வு நீதிபதி சுபாதேவி தலைமையில் நேற்று கொண்டாடப்பட்டது. மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் நீதிமன்ற ஊழியர்கள் சார்பில் மாவட்ட நீதிமன்ற பெண் பணியாளர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை போட்டி, சமையல் போட்டி, ஓவியப் போட்டி, கோலப் போட்டி பாட்டுப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நீதிபதி சுபாதேவி பரிசுகள் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், நாம் கொண்டாடி மகிழும் மகளிர் தினமானது, ஆண்களுக்கு நிகரான உரிமைகள், வேலையில் சரிசமமான ஊதியம் மற்றும் சமத்துவம் கண்டிட மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் இருந்து கிடைத்த வெற்றியின் அடையாளமாக கொண்டாடி வருகிறோம். மேலும் பெண்களுக்கான பாதுகாப்பு, தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள சமமான வாய்ப்பு, கல்வியில் உயர்ந்த நிலையினை அடைந்து இன்னும் தனிச்சிறந்த வெற்றியை பெண்கள் அடைய வேண்டும். எனவே பல்வேறு நிகழ்வுகளில் பங்கு பெற்று தங்களது திறமைகளை இச்சமூகத்தில் பதிந்து சாதனைகள் புரிய வேண்டும், என்றார். இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கருணாநிதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா ஆகியோர் பேசினர். விழாவில் அமர்வு நீதிபதி மலர்விழி, மகிளா நீதிபதி கிரி, முதன்மை உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், நீதித்துறை நடுவர் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
keywords: Women’s Day Celebration, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.