மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்காளர் விழிப்புணர்வு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சாந்தா கலந்து கொண்டு பேசுகையில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கும் வகையில் சாய்வு தளத்துடன் கூடிய வசதி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தேவையான உதவிகளை பெறுவதற்காக PWD என்னும் செயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், தாங்கள் சார்ந்துள்ள வாக்குச்சாவடி மையம், பாகம் எண் என்பன போன்ற தகவல்களை தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து பெற முடியும். மேலும் வாக்களிக்க வரும்போது சக்கர நாற்காலி தேவை என இந்த செயலி மூலம் பதிவு செய்தால் அவர்களுக்கு அதற்கான வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்.


எனவே, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும் இந்த தேர்தலில் முழுமையாக பங்கேற்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றார்.


அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் அனைவரும் நூறு சதவீதம் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதில் மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.


முன்னதாக, தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்திடும் பலகையில் என்னுடைய வாக்கு விற்பனைக்கு அல்ல என்று வாக்காளர்கள் ஆர்வமாக எழுதி கையெழுத்திட்டு சென்றனர்.


இதேபோல பாடாலூரில், வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வருவாய் ஆய்வாளர் பழனியப்பன், கிராம நிர்வாக அதிகாரிகள் பாலுச்சாமி, வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

38total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: