Trichy Airport to shift to new terminal
திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் முனையம் இன்னும் சில தினங்களில் பயணிகளின் பயன்பாட்டிற்காக தயாராக இருக்கிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பழைய பயணிகள் முனையத்தில் செயல்பட்டு வரும் அனைத்து சேவைகளும் முழுமையாக புதிய முனையத்திற்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மலேசிய பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஏர் ஏஷியா தனது பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, வரும் 11ஆம் தேதி காலை 6.00 மணிமுதல் திருச்சி விமான நிலையத்தில் (TRZ) இருந்து சென்று வரும் அனைத்து விமானங்களும் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் (NITB) வழியாக இயங்கும் என ஏர் ஏஷியா தெரிவித்துள்ளது. ஏர் ஏஷியாவின் அனைத்து செயல்பாடுகளும் புதிய டெர்மினலில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, ஏர் ஏஷியா பயணிகளுக்கு புதிய முனையக் கட்டிடத்தில் உள்ள செக் இன் கவுண்டர் பயன்பாட்டை குறைக்கும் வசதியாக இணையதளத்தில் ஆன்லைன் செக் இன் வசதியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. Air Asia MOVE செயலி அல்லது airasia.com இணையதளத்தில் முன்பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்திற்குச் செல்வோருக்கு வரவிருக்கும் விமான நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னரே விமான நிலையத்தில் இருக்குமாறு ஏர் ஏஷியா கேட்டுக்கொள்கிறது.
இந்த புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம், திருச்சி மாவட்டத்தில் 1100 கோடிக்கும் மேற்பட்ட செலவில் கட்டப்பட்டுள்ளது, கடந்த ஜனவரியில் இந்திய பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய சர்வதேச முனையம் ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளை, மற்றும் பீக் நேரங்களில் சுமார் 3,500 பயணிகளை கையாளும் திறன் கொண்டது.
மேலும், புதிய முனையக் கட்டிடம் 60 செக்-இன் கவுண்டர்கள், 5 பேக்கேஜ் டெர்மினல்கள், 60 இமிக்கிரேஷன் கவுண்டர்கள் மற்றும் 44 புறப்பாட்டு குடிவரவு கவுண்டர்களைக் கொண்டது என்பதால், விமான பயணிகளுக்கு எளிதான மற்றும் விரைவான சேவைகளை வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, துபாய், அபுதாபி, ஷார்ஜா, மஸ்கட், மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கு விமான சேவைகளை வழங்கும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம், சர்வதேச பயணிகள் வரவேற்பில் சென்னைக்கு அடுத்ததாக தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ:
கத்தார்: மானியத்துடன் கூடிய குர்பான் ஆடுகள் விற்பனை
ஈத் அல் அதா விடுமுறையை கொண்டாட எட்டு கடற்கரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஹஜ்ஜின் போது சராசரிக்கும் அதிகமான வெப்பம் இருக்கும் என எச்சரிக்கை!
Keywords: Trichy Airport, Tamil News, New Terminal, Airport New Terminal