இதுவெல்லாம் ஒரு பிரச்சனையா? Take care yourself
திருமணம் முடிந்து பல ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் இருந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தங்களுக்கு ஒரு வாரிசு வந்துவிட்டதை எண்ணி உற்சாகமாகத் துள்ளிக் குதித்தனர்.
குழந்தையும் நன்றாக வளர தொடங்கியது. இப்படி சந்தோஷமாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் திடீர் என்று அந்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. குழந்தையைப் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்தார்கள். அதிகமான காய்ச்சல் காரணமாகக் குழந்தையை ஐசியு வில் வைத்து வைத்தியம் பார்த்தார்கள். குழந்தையை பெற்றவர்கள் தங்களது குழந்தையை அந்த கண்ணாடி வழியாகப் பார்த்து வேதனை அடைந்தார்கள்.
குழந்தையைப் பார்க்க வந்த மருத்துவர் அங்குள்ள செவிலியர்களிடம் வெளியில் இருக்கும் பெற்றோர்கள் பற்றி விசாரித்தார். செவிலியர்களும் அந்த தம்பதிக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த குழந்தை பிறந்ததையும் அதனால் குழந்தைக்கு ஒன்றென்றால் துடித்துப் போவதாகவும், இங்கு வந்ததிலிருந்து அவர்கள் எதையும் சாப்பிடக் கூட இல்லை என்றும், எப்போதும் கதவு அருகே இருந்து பார்த்துக் கொண்டே இருப்பதாகவும் கூறினார்கள்.
அந்த குழந்தை நல மருத்துவர் குழந்தைக்குத் தேவையான சிகிச்சைகளை அங்குள்ள செவிலியர்களிடம் எடுத்துக் கூறிவிட்டு வெளியே சென்றார். அப்போது அந்த ஐசியு வார்டின் கதவு அருகிலேயே இருந்த தம்பதி டாக்டரிடம் வந்து ‘எங்கள் குழந்தை எப்படி இருக்கிறான்? அவனுக்கு ஒன்றும் பிரச்சனையில்லையே? அவன் நல்லாகிவிடுவானல்லவா? எப்போது நாங்கள் அவனைக் கூட்டிச் செல்லலாம்’ என்று கேள்வியாக கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
உடனே அந்த மருத்துவர் அவர்களிடம் ‘கொஞ்சம் அமைதியாக என் கூடவே வாருங்கள் நான் ரவுண்ட்ஸ் போய்விட்டு வரும் வரை ஏதும் கேட்கக் கூடாது. முடிந்ததும் நானே உங்கள் குழந்தையின் நிலையைப் பற்றிச் சொல்கிறேன்’ என்று கூறினார்.
முதல் வார்டில் ஒரு குழந்தைக்கு கையில் பெரிய தீக்காயம் ஏற்பட்டு இருந்தது அதற்கு மருந்து தடவிக் கொண்டிருந்தனர். மற்றொரு அறையிலிருந்த குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை முடிந்து செயற்கை சுவாசம் மூலமாக சுவாசித்துக் கொண்டிருந்தது. இன்னொரு அறையில் குழந்தையின் தலையில் பலமான அடிப்பட்டு அறுவை சிகிச்சை முடிந்து கட்டிலில் கிடத்தப்பட்டு இருந்தது.
வேறொரு அறைக்குக் கூட்டி சென்ற மருத்துவர், அங்கே ஒரு காலை இழந்த சிறுவனுக்கு வைத்தியம் பார்க்கப்பட்டு பெரிய கட்டுப் போடப்பட்டு இருந்தது. அங்கே அவனுடைய பெற்றோர்களிடம் விசாரித்தார். அந்த குழந்தையின் மருத்துவ குறிப்புகளைப் பார்த்துவிட்டு செவிலியரிடம் சில குறிப்புகளைக் கூறினார். இவை அனைத்தையும் அவருடன் வந்திருந்த அந்த தம்பதி பார்த்தனர்.
மருத்துவர் தன்னுடைய அறையின் இருக்கையில் அமர்ந்து அந்த தம்பதிகளிடம் பேச்சுக் கொடுத்தார். உங்கள் குழந்தைக்கு ஒன்றும் இல்லை கொஞ்சம் அதிகமான காய்ச்சல்தான் அதுவும் இப்போது சரியாகிவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் நார்மல் வார்டுக்கு மாற்றிவிடுவார்கள். நீங்கள் கவலைப் படவேண்டாம் என்றார். தற்போது நீங்கள் போய் உங்கள் குழந்தையைப் பார்க்கலாம் என்று கூறினார். இதை தவிர அவர் வேறு எதைப்பற்றியும் பேசவில்லை.
அந்த தம்பதியும் எதையும் சொல்லவில்லை, மற்ற குழந்தைகளைப் பார்க்கும் போது தங்கள் குழந்தைக்கு வந்திருப்பது வெறும் காய்ச்சல் இதற்கே நாம் இப்படி மனம் ஒடிந்து போய்விட்டோமே என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட நகர்வுக்காக தயாராயினர்.
நாமும் நம் வாழ்க்கையில் இப்படித்தான் இருக்கிறோம். உலகத்திலேயே நமக்கு மட்டும் தான் பிரச்சனை மற்றவர்கள் எல்லாம் ரொம்பவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறோம் அப்படியில்லை, நம்மை விட அதிகமான பிரச்சனைகளுடன் மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் சிலர் சாதித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
பிரச்சனையைக் கண்டு நாம் பயம் கொள்ளக் கூடாது. பிரச்சனைகள் தான் நம்மை கண்டு பயந்து ஓடவேண்டும். இதுவெல்லாம் ஒரு பிரச்சனையா? என்று நினைத்தாலே பிரச்சனைகள் பயந்து ஓடும்.