பணம் தர மறுத்த தாயைக் கழுத்தறுத்து கொன்ற மகன் கைது. Son arrested for killing mother
பெரம்பலூரை அடுத்த செஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கைலாசத்தின் மனைவி சோலையம்மாள் (வயது 70). இவருக்கு புஷ்பா, மலர்கொடி என 2 மகள்கள் மற்றும் செல்வராஜ்(45) உள்பட 3 மகன்கள் உள்ளனர். இதில் கடைசி மகனான செல்வராஜ் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். கைலாசம் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் சோலையம்மாள் பெரம்பலூர் புறநகர் அரணாரை பிரிவு சாலை விநாயகர் தெருவில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இதற்கிடையே சோலையம்மாளின் 2-வது மகளான மலர்கொடி அரசு பணியில் தட்டச்சராக வேலை பார்த்தார். அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து அவரது பணப்பலன்களை அரசிடம் இருந்து பெறுவது தொடர்பாக சோலையம்மாளுக்கும், செல்வராஜுக்கும் இடையே கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இதில் சோலையம்மாளுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால், அவருக்கு அரசு ரூ.3 லட்சம் பணப்பயன் நிதியை வழங்கியது.
கழுத்தை அறுத்துக்கொலை
வழக்கில் தோல்வி அடைந்ததை செல்வராஜால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர், சோலையம்மாளின் வீட்டுக்கு சென்று பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் செல்வராஜ், சோலையம்மாளின் வீட்டுக்கு சென்றார். அங்கு புஷ்பாவின் மகள் நந்தினியும் இருந்துள்ளார். அப்போது செல்வராஜ், சோலையம்மாளை வீட்டுக்கு வெளியே வருமாறு அழைத்து, தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சோலையம்மாளின் கழுத்தை அறுத்தார். அவரை நந்தினி தடுக்க முயன்றார். இருப்பினும் முடியவில்லை. இதில் சோலையம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார்.
கைது
இதையடுத்து செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து சோலையம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் போலீசார், தப்பி ஓடிய செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
keywords: Son arrested, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்.
You must log in to post a comment.