எளிமையான முன்னேற்றம்

எளிமையான முன்னேற்றம் ஏமாற்றத்தை தரும்.

1307

எளிமையான முன்னேற்றம் ஏமாற்றத்தை தரும்.

Simple improvement can be disappointing.

எந்த ஒரு எளிமையான முன்னேற்றமும் நமக்கு விரைவில் ஏமாற்றத்தைத் தந்துவிடும்.

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தபடியே இப்படிச் சம்பாதிக்கலாம், அப்படி சம்பாதிக்கலாம் என்று சமூக ஊடகங்களில் பலரும் தங்கள் கருத்துக்கள் சொல்வதைப் பார்த்திருக்கிறோம்.

எளிமையான முன்னேற்றம்

இது சம்பந்தமாகக் கூகுள் போன்ற தேடுபொறிகளில் அதிகமான தேடல்கள் இருக்கிறது. வீட்டிலிருந்து சம்பாதிப்பது எப்படி? கோடீசுவரர் ஆவது எப்படி? அம்பானி ஆவது எப்படி? ஆன்லைனில் எப்படி அதிகமாகச் சம்பாதிப்பது? என்று ஏகப்பட்ட தேடல்கள் இருக்கிறது.

இலவச யோசனைகள்

இவர்களைப் போன்ற ஆட்களுக்கு தகுந்தார் போல இதற்கான பதிலும் யுடியுபர்ஸ் தங்களுக்குத் தெரிந்த யோசனைகளை அல்லி வீசிக்கொண்டு இருக்கிறார்கள். அதைப் பார்த்து ஆக இவ்வளவு எளிதாகப் பணம் சம்பாதிக்க முடியுமா? என்று ஆவலுடன் உள்ளே சென்று பார்த்தால் நீங்கள் நினைப்பது போல் சம்பாதிப்பது அவ்வளவு எளிதல்ல. இதில் நீங்கள் அதிகமாக வேலை செய்ய வேண்டும். அப்போது தான் உங்களால் அந்த தொகையைச் சம்பாதிக்க முடியும் என்று சொல்வார்கள்.

ஆவலுடன் உள்ளே சென்று பார்த்தவனுக்கு, அப்படியே சப்பென ஆசையே விட்டுவிடும். மாதம் ஐம்பதாயிரம் ஈசியா சம்பாதிக்கலாம் என்று தலைப்பு வைத்துவிட்டு உள்ளே சென்று பார்த்தால் கஷ்டப்பட்டால்தான் அதைச் சம்பாதிக்க முடியும் என்று சொல்கிறார்கள் என்று கடுப்பாகும். என்ன செய்வது ஈசியாக என்ற ஒரு வார்த்தைதான் அவருக்கான அந்த பார்வையாளர்களை அதிகரிக்க வைக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தி அப்படி தலைப்பை வைக்கிறார்கள்.

தொடர்ந்து உழைக்க வேண்டும்.

சரி நாம் விசயத்திற்கு வருவோம். தலைப்பு என்னவோ தவறாக வைத்தாலும் உள்ளுக்குள் அவர்கள் சொல்லும் சில விசயங்கள் நல்லவைதான். அதில் நமக்கு நல்ல பாடங்கள் இருக்கிறது. அதாவது அவர்கள் சொல்வது போலத் தொடர்ந்து உழைக்க வேண்டும். ஆர்வமாகச் செய்ய வேண்டும். விருப்பத்துடன் செய்ய வேண்டும் என்று சில விசயங்களைச் சொல்வார்கள். அது உண்மையே அதில் மாற்றுக் கருத்துச் சொல்லிட முடியாது.

உதாரணத்திற்கு நாம் எந்த துறையைத் தேர்ந்தெடுக்கின்றோமோ அதைப்பற்றி முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். பிறகு அதில் இறங்கி வேலை செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் வேலைகளால் சில வாரங்களில் அதற்கான பயன் கிடைக்கலாம். சில மாதங்களில் அதற்கான பயன் கிடைக்கக் கூடும்.

அதே போல சில வியாபாரங்களில் சில வருடங்கள் கழிந்து கூட அதன் பயன் கிடைக்கலாம். அது வரை பொறுத்திருக்க வேண்டும். அப்படிக் காத்திருக்க முடியாமல் தான் பலர் தங்களின் வியாபாரத்திலோ அல்லது வேலையிலோ தோல்வியைச் சந்திக்கின்றனர்.

விருப்பமான துறை

நமக்கு விருப்பமான துறை சார்ந்த வேலை அல்லது வியாபாரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் நமக்கு ஒரு திருப்தி இருக்கும், அதில் நமக்குச் சலிப்பு ஏற்படாது. தொடர்ந்து உழைத்து அதில் வெற்றி பெற முடியும். ஆனால் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு அதிகமான லாபம் என்று, அதிகமான ஊதியம் என்று இறங்கி நீங்கள் எதிர்பார்த்த அளவில் ஊதியமோ, லாபமோ இல்லையென்றால் அதன் மேல் வெறுப்பை உண்டாக்கிவிடும்.

ஆக எந்த வேலையானாலும் சரி, எந்த வியாபாரம் ஆனாலும் சரி ஏற்றம், இறக்கம் இருக்கத்தான் செய்யும். அதைக் கண்டு தயங்கி விட்டுவிடக்கூடாது. தொடர்ந்து முயற்சித்து கொண்டே இருக்க வேண்டும் அதுவே வெற்றிதான். எந்த ஒரு எளிமையான முன்னேற்றமும் விரைவில் ஏமாற்றத்தைத் தந்துவிடும். கஷ்டப்பட்டு வரும் முன்னேற்றம் தான் சந்தோஷத்தையும், நல்ல திருப்தியையும் தரும்.

ஆதலால் முப்பது நாட்களில் சம்பாதிப்பது எப்படி, மாதத்திற்கு வீட்டிலிருந்தபடியே லட்ச ரூபாய் சம்பாதிப்பது எப்படி என்று தேடிக்கொண்டிருக்காமல் உங்களுக்குப் பிடித்த வேலையை, வியாபாரத்தைத் தொய்வில்லாமல் செய்து வெற்றியைச் சுவையுங்கள்.

எமது பேஸ்புக் பக்கம்
Leave a Reply

%d bloggers like this:
Verified by MonsterInsights