School starts in UAE: traffic jams and solutions
அமீரகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல், புதிய கல்வியாண்டு தொடங்குகின்றது. பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
பள்ளிகள் திறக்க உள்ள சூழலில் பள்ளி பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மீண்டும் அதிகரிக்க தொடங்கும். இதற்கு முக்கிய காரணமாக, பள்ளி முன்பு குழந்தைகளை இறக்கிவிடவும், அழைத்து செல்லவும் வரும் பெற்றோர்கள் செய்யும் செயல்களே பிரதான காரணமாக இருக்கிறது என்று போக்குவரத்து நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
காலை, மாலை நேரங்களில் பள்ளி பகுதிகள் நிறைய வாகனங்கள் இயங்குவதால் நெரிசலான இடமாக மாறுகின்றன. ஒரு பெற்றோர் ஒரு நிமிடம் நிற்கும்போது, அடுத்தவரும் தொடர்ந்து நிற்பதால், நீண்ட வரிசை உருவாகி போக்குவரத்து நின்று விடுகிறது. இதற்கும் மேலாக ஒரு சிலர் இரண்டு அல்லது மூன்று பாதைகளை மறைத்து வண்டியை நிறுத்துகிறார்கள் என துபாயில் வசித்து வருபவர் கவலை தெரிவித்தார்.
இதுபோன்ற செயல்கள் மிகவும் ஆபத்தானது. சேவை சாலை(Service Road)களில் கூட, வாகனத்தை நடுவில் நிறுத்துவதால் பல பாதிப்புகள் ஏற்படலாம் என ட்ராபிக் கன்சல்டிங் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் மொஸ்தஃபா அல் தாஹ் கூறினார்.
அத்துடன், பள்ளி முன்பு சாலையின் நடுவில் வாகனத்தை நிறுத்துவது சட்டப்படி தடை செய்யப்பட்டது. துபாயில் இதற்காக 1,000 திர்ஹாம் வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, 6 கரும்புள்ளிகள் உரிமத்தில் சேர்க்கப்படும்.
“அபராதம் என்பது ஓர் எச்சரிக்கை மட்டுமே. ஆனால், பெற்றோர்கள் சாலை விதிகளை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்,” என எமிராத் போக்குவரத்து பாதுகாப்பு ஆய்வாளர் மற்றும் துபாய் காவல்துறையின் முன்னாள் போக்குவரத்து ஆய்வுப் பிரிவு தலைவர் கூறினார்.
நெரிசல் நேரத்தைத் தவிர்க்க, குழந்தைகளைப் பள்ளிக்கு முன்னதாகவே அனுப்புவது ஒரு நல்ல யோசனையாக இருக்கும். “சரியான இடங்களில் வாகனத்தை நிறுத்தி, குழந்தைகளை ஒரு சிறிய தூரம் நடக்கச் செய்ய வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
மாறி மாறி பள்ளி நேரம்:
மாணவர்கள் ஒரே நேரத்தில் வருவதைத் தவிர்க்கச் சில பள்ளிகள் மாறி மாறி உள்நுழையும் நேரத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. துபாயின் அல் பர்ஷா சௌத் பகுதியில் உள்ள Bloom World Academy இதற்கான முயற்சியில் முன்னணியில் உள்ளது.
“நாங்கள் அமீரகத்தில் காலை 9 மணிக்குத் தொடங்கும் முதல் பள்ளி. குறைவான நெரிசல், குறைந்த மன அழுத்தம். இது குழந்தைகளின் வீடுகளில் காலை நேரத்தைச் சீராக அமைக்க உதவுகிறது.” எனப் பள்ளியின் முதல்வர் ஜான் பெல் கூறியதாக ‘கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனம்’ முன்னதாக தெரிவித்தது.
அபுதாபி Cranleigh பள்ளியின் முதல்வர் டிரேசி க்ரோடர்-க்ளோ, “பள்ளி முன்பு போக்குவரத்து சீராகச் செல்ல, நாங்கள் சிறப்பாகத் திட்டமிட்டுள்ளோம். நியமிக்கப்பட்ட வாகன நிறுத்தும் இடங்கள், நடைப் பகுதிகளில் பாதுகாப்பு குழுவினர் நன்றாகச் செயல்படுகின்றனர்” என தெரிவித்தார்.
“பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு உதவ, நமது மூத்த நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எல்லா வாயில்களிலும் குழந்தைகளை இறக்கும் இடங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளி பகுதியில் எந்தவொரு போக்குவரத்து சிக்கலும் ஏற்பட்டால், அதை உடனடியாகச் சரிசெய்வதற்கான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்,” என அவர் மேலும் கூறினார்.
கூட்டுப் பயணம் மற்றும் பள்ளிப் பேருந்துகளை ஊக்குவிக்க வேண்டும்:
சாலை மற்றும் பாதுகாப்பு (Road Safety UAE) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாளர் டாமஸ் எடல்மேன் கூறுகையில், “கூட்டுப் பயணம் அல்லது பெற்றோர் பள்ளிப் பேருந்தைப் பயன்படுத்தும் நிலையை உருவாக்க வேண்டும். இது ரஸ் அவர் (Rush Hour) நேரத்தில் வாகன எண்ணிக்கையைக் குறைக்கும்.
“பள்ளி முன்பு வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்கப் பாதுகாவலர்கள் எப்போதும் இருக்க வேண்டும். அதேசமயம், நிறுத்துமிடங்களைக் கூடுதலாக ஏற்படுத்த வேண்டும்,” என அவர் கூறினார்.
பெற்றோர்கள் நேரத்தைத் திட்டமிட்டு இயக்குவது முக்கியம். “அவர்கள் 15-20 நிமிடங்களுக்கு முன்னதாக வர வேண்டும். வாகன எண்ணிக்கையைக் குறைக்கக் கூட்டுப் பயணம் அல்லது பள்ளிப் பேருந்தைப் பயன்படுத்த வேண்டும்” என எடல்மேன் அறிவுறுத்தினார்.
“பள்ளி முன்பு குழந்தைகளை இறக்கி விடும்போதும், அழைத்து செல்லும் போதும் பலரிடம் தவறான நடவடிக்கைகளைப் பார்க்கிறோம். பெற்றோர்கள் நல்ல நடத்தை, சாலைப் பாதுகாப்பு, மற்றும் மற்றவர்களிடம் மரியாதையை கடைப்பிடித்து குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அதிலும், அவசர கதியில் பள்ளி முன்பு வாகனங்களை நிறுத்தாமல் இருப்பது மிக முக்கியமாகும்” என அவர் வலியுறுத்தினார்.
Keywords: traffic jams and solutions, Gulf Tamil News, Tamil Gulf News, GCC Tamil News, Dubai News Tamil, Dubai Tamil News
அமீரக (Gulf Tamil News) செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.