sarkkaraivalli kilangu

சர்க்கரைவள்ளி கிழங்கு நல்லதா கெட்டதா கரெக்டா தெரியனுமா?

135

சர்க்கரைவள்ளி கிழங்கு நல்லதா கெட்டதா கரெக்டா தெரியனுமா?

பொதுவாகவே கிழங்குகளில் நம் உடலுக்கு தேவையான சத்துகள் இருக்கும். ஆனால் அதனுடன் சில பிரச்சனைகளும் சேர்ந்தே இருக்கும். அதேபோல் சர்க்கரைவள்ளி கிழங்கு இதில் இருக்கும் பலன்கள் என்ன? அதிலுள்ள பிரச்சனைகள் என்ன? என்பதை இந்த பதிவில் விபரமாக பார்க்கலாம்.

சர்க்கரைவள்ளி கிழங்கு இதன் வரலாறு

முதன் முதலில் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் இந்த சர்க்கரைவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சர்க்கரை வள்ளிக் கிழங்கின் தாவரவியல் பெயர் இபோமோயா பட்டடாஸ். இந்த கிழங்கு நிஜத்தில் தாவரத்தின் வேர்ப் பகுதியாகும். இது வெப்பமண்டலத்தில் விளையும் தாவர வகை. சிவப்பு, சாம்பல், வெள்ளை, கருஞ்சிவப்பு என பல வண்ணங்களில் விளைகிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கு இதில் என்ன இருக்கிறது?

இயற்கையாகவே சர்க்கரை வள்ளிக்கிழங்கானது இனிப்பு சுவை கொண்டது. 100 கிராம் அளவு கிழங்கில் 70 முதல் 90 சதவீதம் கலோரி ஆற்றல் இருக்கிறது. இதில் குறைந்த அளவிலான கொழுப்பு இருக்கிறது.

மாவுசத்து நிறைந்த இந்த கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி6, வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், செலினியம் போன்ற தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.

பலருக்கும் இது சுவையான கிழங்கு என்பது தெரியும். இதனால் உடலுக்கு கிடைக்கக்கூடிய இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள் பற்றியும் தெரிந்து கொள்வோமா?

உடல் எடையை கட்டுப்படுத்த:

சர்க்கரை வள்ளிக்கிழங்கு இதில் பைபர் அதிகம் இருக்கிறது. இதனால் இதை சாப்பிட்டவுடன் வயிறு நிரம்புவது போல் தோன்றும். அதாவது நார்ச்சத்தானது விரைவில் செரிமானம் ஆகாமல் தடுத்துவிடுகின்றது.

அதனால் உடலில் கொழுப்பு சத்தை சேர்க்க தூண்டும் இன்சுலின் சுரப்பது தடுக்கப்படுகிறது. இதனால் தேவையற்ற கொழுப்புகள் கூடி எடை அதிகரிக்காமல் தடுக்க பயன்படுகிறது.

ரத்த அழுத்தம்:

இந்த கிழங்கில் பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மிக முக்கிய மினரல். அதனால் சர்க்கரைவள்ளி கிழங்கை உணவில் சேர்ப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்களும் அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களும் சாப்பிட நல்ல பயன் தரும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகம்:

மற்ற கிழங்கு வகைகளை விட இதில் அதிகளவு பீட்டா கரோட்டின் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்திக்கு உதவிடும். இவை சரும ஆரோக்கியம், தோல் மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு பெரிதும் உதவிடும்.

தேக ஆரோக்கியம்:

மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி தேக ஆரோக்கியம் மற்றும் தோல் – நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.

உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க:

இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இவை மற்ற மாவுச்சத்துள்ள உணவுகளைப் போலல்லாமல் உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க:

இந்த சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.  இதிலுள்ள அதிகளவு அந்தோசயனின் எனும் பொருள் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சரும பராமரிப்பிற்கு:

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக இந்த கிழுங்குகள் உள்ளன.  நமது தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான கொலாஜனை இவை வழங்குகின்றன. இதனை நாம் சாப்பிடுவதால் நமது சருமமும், தலைமுடியும் நன்றாக இருக்கும்.

பார்வை திறனுக்கு சிறந்தது:

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ ஆக செயலாற்றும்போது நம் உடலுக்கு போதுமான வைட்டமின் சத்து கிடைக்கிறது.  இதனை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் பிரகாசமான பார்வை திறனை நாம் பெறலாம்.

மலச்சிக்கலை போக்க:

நார்ச்சத்து நிறைந்த இந்த கிழங்கு வகை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் மலச்சிக்கலைக் குறைக்க உதவுகிறது.  செரிமான அமைப்பை சிறப்பிக்கக்கூடிய பைட்டோஸ்டெரால் எனும் பொருள் இந்த கிழங்கில் இருப்பதால் நமது செரிமான திறன் மேம்பட உதவிபுரிகிறது.

வெள்ளை சோளம் ஆரோக்கியமானதா?

இப்படி பணத்தை சேமிச்சு பாருங்களேன்..!

சர்க்கரைவள்ளி கிழங்கின் மற்ற பயன்கள்:

தோலில் அலர்ஜி ஏற்பட்டு அரிப்பு ஏற்பட்டால் சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதனோடு மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்திடுங்கள் . பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் அதனை அரிப்பு உள்ள இடத்தில் தடவி வரலாம்.

சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடுவதால் உண்டாகும் பிரச்சனைகள்:

இந்த கிழங்கில் விட்டமின் ஏ இருப்பதால் அதிகமாக சாப்பிட்டால் நமக்கு சில பக்க விளைவுகளை உண்டாக வாய்ப்புகளும் உள்ளது.

  1. இதில் ஆக்சலேட் அதிகமாக காணப்படுகிறது. இது ஒரு வகை கரிம அமிலமாகும். இது சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு மேலும் பல சிக்கல்களை வழங்குகிறது. இந்த அமில ஆக்சலேட் சிறுநீரகத்தில் படிந்து வலியை அதிகமாக்குகிறது. எனவே சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தில் இருப்பவர்கள் அதை தவிர்ப்பது நல்லது.
  2. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மனிடோல், சர்க்கரை ஆல்கஹால் அல்லது பாலியால் என்ற ஒரு வகை கார்போஹைட்ரேட் உள்ளது. இந்த கார்போஹைட்ரேட் நமக்கு வயிற்று அசெளகரியத்தை உண்டாக்குகிறது. அதிகப்படியான சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு வயிற்று போக்கு, வயிற்று வலி மற்றும் வயிற்று வீக்கம் ஏற்படலாம்.
  3. சர்க்கரை வள்ளிக்கிழங்கு அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு இது சில பிரச்சினைகளை உண்டாக்குகிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் மிதமான அளவு எடுப்பதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். இருப்பினும் அதிகமாக அளவு நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது அல்ல.
  4. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பொட்டாசியம் அதிகளவில் காணப்படுவதால் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. இது இதய பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்கிறது. இருப்பினும் அதிகப்படியான பொட்டாசியம் உட்கொள்வது ஹைபர்கேமியா அல்லது பொட்டாசியம் நச்சுத்தன்மைக்கு வழி வகுக்கும். இது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
  5. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் விட்டமின் ஏ இருப்பதால் அதை அதிகமாக உட்கொள்வது பல பக்க விளைவுகளை உண்டாக்குகிறது. இதனால் தலைவலி மற்றும் சொறி போன்ற சருமப் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
  6. அதிக விட்டமின் ஏ உட்கொள்ளுதல் கடினமான முடி, புருவங்களில் உள்ள முடி உதிர்தல், வெடிப்புற்ற உதடு, வறண்ட சருமம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அதிகமாக விட்டமின் ஏ எடுத்துக் கொள்வது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.

இறுதியாக

எது எப்படியோ எந்த உணவாக இருந்தாலும் அளவோடு எடுத்து கொண்டால் எப்போதும் நலமே. அது இந்த சர்க்கரைவள்ளி கிழங்கிற்கும் பொருந்தும். சீசன் சமையங்களில் மட்டுமே கிடைக்கும் இவ்வகை கிழங்குகளை அளவோடு உண்டு ஆரோக்கியத்தை பாதுகாப்போம்.

Our Facebook Page

Traditional Kitchen




Leave a Reply

%d
Verified by MonsterInsights