ஊரடங்கு தளர்வு: பெரம்பலூர் மாவட்டத்தில் சலூன், டீக்கடைகள் திறப்பு.
Saloon and tea shops open in Perambalur district.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகளின்படி சலூன், டீ கடைகள் திறக்கப்பட்டன.
கடைகள் திறப்பு
கொரோனா 2-ம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தற்போதைய ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் 50 நாட்களுக்கு மேலாக திறக்கப்படாமல் இருந்த சலூன் கடைகள், அழகு நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
காலை 6 மணிக்கு திறக்கப்பட்ட அழகு நிலையங்கள், சலூன்கள் மாலை 5 மணி வரை இயங்கியது. இதேபோல் தேநீர் (டீ) கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டது. ஆனால் அரசு அறிவித்தபடி பார்சல் முறையில் விற்பனை செய்யாமல், பிளாஸ்டிக் கப்களில் டீ- காபி விற்பனை செய்யப்பட்டது.
கடைகளில் கூட்டம்
இனிப்பு கார வகை கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கியது. அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சி மட்டும் மேற்கொள்ள திறக்கப்பட்டது. அங்கு குறைவானவர்களே வந்து நடைபயிற்சி மேற்கொண்டனர். வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் திறக்கப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கின.
கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகளும், வீட்டு உபயோக மின் பொருட்களின் பழுது நீக்கும் கடைகள், செல்போன் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்கப்பட்டிருந்தது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நிறுவனங்கள்
மண்பாண்டம் மற்றும் கைவினை பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டது. இ-சேவை மையங்களும் திறக்கப்பட்டது.
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும், தற்போது இதர தொழிற்சாலைகளும் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டது. தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கியது. வீட்டு வசதி நிறுவனம் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் அனைத்து காப்பீட்டு நிறவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டது.
முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு…
பெரம்பலூர் மாவட்டத்தில் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. அதில் முககவசம் அணிந்து வந்தவர்களை மட்டும் கடைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில கடைகளில் வாடிக்கையாளரின் உடல் வெப்ப நிலையை தெர்மல் ஸ்கேனர் கருவியை கொண்டு பரிசோதனை செய்த பின்னரே, கடைக்குள் அனுமதித்தனர்.
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம்
பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் அனுமதிக்கப்பட்டது. மாவட்டத்தில் பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு சேருவதற்கு மாணவ-மாணவிகளுக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டது. நாளை (புதன்கிழமை) முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
குன்னம்
குன்னம் பகுதியில் உள்ள குன்னம், வேப்பூர், பேரளி, கீழப்புலியூர், கீழப்பெரம்பலூர் ஆகிய கிராமங்களில் உள்ள மேல்நிலை பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு சேர்க்கை நடந்தது. பேரளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கை பள்ளி தலைமை ஆசிரியர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்தது. அறிவியல் ஆசிரியர் துரைசாமி உடனிருந்தார்.
குன்னம் பகுதியில் உள்ள அந்தந்த பள்ளிகளில் 1 முதல் 10-ம் வரையிலான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கையில், பெரும்பாலும் அந்தந்த பள்ளிகளில் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்களே சேர்ந்தனர். மாணவர்கள் முதல் குரூப்பில் சேர வேண்டுமென விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் பள்ளிகளில் குறைந்த அளவிலான மாணவர் சேர்க்கையே நடந்தது.
தினத்தந்தி
Keywords: Saloon and tea shops, Perambalur District
You must log in to post a comment.