12 கடைகளில் அங்கீகாரம் இல்லாத உரங்கள் விற்பனைக்கு தடை
Prohibition on sale of unauthorized fertilizers
உரக்கடைகளில் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகளில் உரிய அனுமதி பெறாமல் உரங்கள் விற்பனை செய்வதாகவும், யூரியா வாங்கினால்தான் விவசாயிகளுக்கு இணை உரங்கள் வழங்கப்படுவதாகவும் கலெக்டர் அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் உரக்கடைகளில் திடீர் ஆய்வு செய்ய வேளாண்மை துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டார். அதன்படி வேளாண்மை துறை அலுவலர்கள் 4 குழுக்களாக சென்று மாவட்டத்தில் உள்ள 198 தனியார் உரக்கடைகளில் ஆய்வு செய்தனர்.
இதில் துங்கபுரத்தில் உள்ள தனியார் உரக்கடையில் வேளாண்மை துறை இணை இயக்குனர் கருணாநிதி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ததில், அந்த கடையில் யூரியா வாங்கினால்தான் விவசாயிகளுக்கு இணை உரம் வழங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த உரக்கடையில் உரிய அனுமதி பெறாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் 6 டன் எடையிலான உரங்களை விற்க தற்காலிக தடை விதித்து, அந்த கடைக்கு நோட்டீசை வேளாண்மை துறை அலுவலர்கள் வழங்கினர்.
நோட்டீஸ்
இதேபோல் முறையாக இருப்பு பதிவேட்டில் அங்கீகாரம் இல்லாத உர நிறுவனங்களின் உரங்களை இருப்பு வைத்தல் மற்றும் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி விதிமீறல்கள் கண்டறியப்பட்டு ஆலத்தூர் வட்டாரத்தில் 4, பெரம்பலூர் வட்டாரத்தில் 2, வேப்பூர் வட்டாரத்தில் 3, வேப்பந்தட்டை வட்டாரத்தில் 2 என மொத்தம் 11 தனியார் உரக்கடைகளில் உரிய அனுமதி பெறாமல் இருப்பு வைத்திருந்த 192.05 மெட்ரிக் டன் உரங்களை விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டது. மேலும், அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தனியார் உரக்கடைகளில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலோ, பெரம்பலூர் மாவட்டத்திற்கான விற்பனைக்கென்று ஒதுக்கீடு செய்யப்படும் உரங்களை, வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டலோ, அந்த உரக்கடைகளின் உர விற்பனை உரிமத்தை ரத்து செய்து, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை துறை அலுவலர்கள் எச்சரித்தனர்.
தினத்தந்தி
Keywords: Perambalur News, Perambalur District News, Prohibition on sale,
You must log in to post a comment.