ஃபோனியின் பேயாட்டத்தால் உருக்குலைந்த ஒடிசா!

ஃபோனியின் பேயாட்டத்தால் உருக்குலைந்த ஒடிசா!


ஃபோனி புயலால் ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரம், கட்டாக், புரி மாவட்டங்கள் உருக்குலைந்து போயுள்ளன. இதுவரை  10 பேர் உயிரிழந்த நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஒடிசாவைத் தொடர்ந்து, ஃபோனி புயல், மேற்குவங்கத்தை இன்று அதிகாலை தாக்கியது. தலைநகர் கொல்கத்தாவில் நேற்று மாலை முதலே கனமழை கொட்டித் தீர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசாவைத் தொடர்ந்து, மேற்குவங்கத்தை இன்று அதிகாலை கடந்த புயலால், வடகிழக்கு மாநிலங்களிலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான மிக அதிதீவிர புயலான ஃபோனி, ஒடிசாவில் புரி அருகே நேற்று காலை கரையைக் கடந்தது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவைத் தாக்கிய ஃபோனி புயல், கரையைக் கடந்தபோது, மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது.

புவனேஸ்வர், கட்டாக் மாவட்டங்கள் வழியாக வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. புரி மாவட்டத்தில், குடிசை வீடுகளும், தெருவோர விற்பனையாளர்களின் கடைகள் முற்றிலும் சேதமடைந்தன. புரி பகுதியில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பாதிக்கப்பட்டன.

கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த கிரேன், சூறாவளிக்காற்றில் விழுந்தது. இதேபோல, பல்வேறு கட்டிடங்களிலும் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. கண்ணாடிகள் பிய்த்து எரியப்பட்டன.

புவனேஸ்வரம் விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது. புரி பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் கடற்படையின் விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதில், பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டதுடன், பல பகுதிகளில் கடும் சேதங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சூறாவளிப்புயலால் ஏராளமான மரங்கள், வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. மின்சார கம்பங்கள் விழுந்ததால், மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. செல்போன் கோபுரங்கள் விழுந்ததால், செல்போன் மற்றும் தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டன.

கனமழையும் பெய்ததால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. விவசாயப் பயிர்களும், தோட்டப் பயிர்களும் சேதமடைந்தன. எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மாணவர் விடுதியின் மேற்கூரை சேதமடைந்தது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சாலையில் விழுந்த மரங்களை இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஃபோனி புயல் காரணமாக, புரி மற்றும் புவனேஸ்வர் பகுதிகளில் தலா  3 பேர் உயிரிழந்தனர். நயாகர் பகுதியில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார்.

கேந்திரபாரா பகுதியில் நிவாரண முகாமில் தங்கியிருந்த மூதாட்டி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மயூர்பஞ்ச் பகுதியில் மரம் முறிந்து விழுந்து இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கஞ்சம், கஜபதி பகுதிகளில் சாலை கட்டமைப்பு சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், புவனேஷ்வர் உள்ளிட்ட மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப்பணிகளை மேற்கொள்ள சென்னை மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து 2 விமானங்களும், 34 மீட்புக் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி., பரமேஸ் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடலோர காவல் படை சார்பில் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. புயல் தாக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து முதலமைச்சர் நவீன் பட்நாயக் அதிகாரிகளுடன் ஆய்வுசெய்தார்.

புவனேஸ்வர் விமான நிலையத்திலிருந்து இன்று மதியம் முதல் விமான சேவையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரயில்களில் இலவசமாக நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லலாம் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கனமழை பெய்தது. 2,000 மின் கம்பங்களும், 218 செல்போன் கோபுரங்களும் சேதமடைந்தன.

ஒடிசாவைத் தொடர்ந்து, ஃபோனி புயல், மேற்குவங்கத்தை இன்று அதிகாலை தாக்கியது. தலைநகர் கொல்கத்தாவில் நேற்று மாலை முதலே கனமழை கொட்டித் தீர்த்தது. மேற்குவங்கத்தில் நாளை மறுதினம் வரை கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

45,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, ஃபோனி புயல், வங்கதேசத்தை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

source: new18Leave a Reply

%d bloggers like this: