Pongal gift

அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்.

544

அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க கோரி பிச்சை எடுக்கும் போராட்டம் | Pongal gift: Workers engaged in begging struggle.

அனைத்து தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க கோரி திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் உத்தரவின்படி, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெரம்பலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டுமான தொழிலாளர்களின் நல வாரியங்களை தவிர்த்து மற்ற 16 வாரியங்களில் பதிவு பெற்ற அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க கோரி, தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே நூதன போராட்டமாக கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களிடம் பிச்சை எடுத்தனர்

போராட்டத்திற்கு அச்சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள், அனைத்து தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களை முறையாக கணக்கெடுக்காமல் இருட்டடிப்பு செய்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக மத்திய அரசு ரூ.7 ஆயிரத்து 500-ம், மாநில அரசு ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டும்.

நலவாரியத்தில் ஆன்லைன் மூலம் தொழிலாளர்களை பதிவு செய்யும் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து தொழிலாளர்கள் கையில் திருவோடு ஏந்தி பொதுமக்களிடம் பிச்சை எடுத்தனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

Keywords: Pongal gift, Perambalur News, Perambalur District News, பெரம்பலூர் செய்திகள்




%d bloggers like this: