Places of worship opened in Perambalur district.

பெரம்பலூர் மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பு.

273

பெரம்பலூர் மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பு.

Places of worship opened in Perambalur district.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்கள், பள்ளிவாசல்கள், சர்ச்கள் ஆகிய வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் அரசின் உத்தரவின்படி மூடப்பட்டது. மூடப்பட்டிருந்த கோவில்களில் தினசரி பூஜைகள் மட்டும் நடத்திட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த காரணத்தினால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் அனைத்து வழிபாட்டு தலங்களும் அரசின் உத்தரவின்படி கடந்த மாதம் 28-ந் தேதி முதல் திறக்கப்பட்டது. ஆனால் மற்ற மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்கப்படவில்லை. தமிழகத்தில் நேற்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் ஊரடங்கை வருகிற 12-ந்தேதி வரை தமிழக அரசு நீட்டித்தது. அதில் அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

வழிபாட்டு தலங்கள் திறப்பு

அதன்படி 70 நாட்களுக்கு பிறகு நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில், பெரம்பலூரில் மதனகோபாலசுவாமி கோவில், பிரம்மபுரீஸ்வரர் கோவில், பாலமுருகன் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், பாலதண்டாயுதபாணி கோவில், குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர் கோவில், எசனை வேணுகோபாலசுவாமி கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலை கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 35 கோவில்களும், மற்ற கோவில்களும் பக்தர்கள் தரிசனத்திற்காக நேற்று முதல் திறக்கப்பட்டன.

பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

கோவில்கள் திறக்கப்படுவதற்கு முன்பு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மனமுருகி வேண்டியதை காணமுடிந்தது. பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதேபோல் கிறிஸ்தவ தேவாலயங்களும், பள்ளிவாசல்களும், தர்காக்களும் திறக்கப்பட்டு வழிபாடு நடந்தன. வழிபாட்டு தலங்களுக்கு வருபவர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு ஊழியர்கள் பரிசோதனை செய்தனர். வழிபாட்டு தலங்களுக்கு வந்தவர்கள் முககவசம் அணிந்து வந்தனர். முககவசம் அணியாமல் வந்தவர்கள், வழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

தினத்தந்தி

Our Facebook Page

Keywords: Places of worship




%d bloggers like this: