பெரம்பலூர் அருகே கொத்தடிமையாக இருந்த சிறுவர்கள் மீட்பு.

372

பெரம்பலூர் அருகே கொத்தடிமையாக இருந்த சிறுவர்கள் மீட்பு.

பெரம்பலூர் அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 2 சிறுவர்களை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு மீட்டனர்.

பெரம்பலூர் அருகேயுள்ள சத்திரமனையைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகன் கண்ணன். ஆட்டுப் பண்ணை வைத்துள்ள இவர், 2 சிறுவர்களை ஆடு மேய்க்கும் தொழிலில் கொத்தடிமையாக ஈடுபடுத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மைய இயக்குநர் முகமது உசேன், ஒருங்கிணைப்பாளர் திவ்யா ஆகியோருக்கு கிடைத்த தகவலையடுத்து, குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் அங்கு சென்று விசாரித்தபோது, சிறுவர்கள் இரண்டு பேரும் பொம்மனப்பாடி கிராமத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.

[the_ad id=”7251″]

தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம், செவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் முருகன் (13), திருச்சி மாவட்டம், கருடமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் மதி (10) என்பதும், அவர்களது பெற்றோரிடம் ஆண்டுக்கு ரூ. 60 ஆயிரம் தருகிறேன் எனக் கூறி அழைத்து வந்து, ஆடுமேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, மீட்கப்பட்ட 2 சிறுவர்களையும் பெரம்பலூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொம்மனப்பாடி கிராம நிர்வாக அலுவலர் சசிகலா அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அண்ணாதுரை வழக்குப் பதிந்து, சிறுவர்களை கொத்தடிமையாக ஈடுபடுத்திய கண்ணணை தேடி வருகின்றனர்.

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: