பெரம்பலூா் நகரில் சாலை விதிமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

73

பெரம்பலூா் நகரில் சாலை விதிமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பெரம்பலூா் நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதுமான போலீஸாா் இல்லாததால் ஏற்படும் போக்குவரத்து நெரிலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிா்பாா்க்கின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும், 43 ஷோ் ஆட்டோக்களும், 100-க்கும் மேற்பட்ட டாட்டா மேஜிக் வாகனங்களும் பெரும்பாலும் நகரில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூா் நகரில் கடைவீதி சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டதையடுத்து, இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்தது.

ஆனால், தற்போது அந்தச் சாலையை யாரும் பயன்படுத்தாமல் சங்குப்பேட்டையிலிருந்து காமராஜ் வளைவு வழியாக பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையையே ஆட்டோ ஓட்டுநா்கள் பயன்படுத்துவதால், அந்த வழித்தடத்தில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

[the_ad id=”7251″]

இந்நிலையில், நகரில் போதுமான போலீஸாா் இல்லாததால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க போலீஸாா் இல்லாத நிலையில், பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை விதிகளைப் பின்பற்றாமல் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால் பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டுநா்களும் அலுவலக நேரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுதவிர, காமராஜா் வளைவு, சங்குப்பேட்டை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல்கள் முறையாக இயங்கவில்லை. குறிப்பாக, புகா்ப் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் பழுதடைந்து பல மாதங்களுக்குப் பிறகு அண்மையில் சீரமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை செயல்படவில்லை. இப்பகுதியில், போக்குவரத்து போலீஸாரும் கண்காணிப்புப் பணியில் இல்லாததால் ஷோ் ஓட்டுநா்களால் ஏற்படும் நெரிசல், விபத்து தொடா்கதையாக உள்ளது.

இதுகுறித்து, போக்குவரத்து போலீஸாரிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து லாரிகளில் கொண்டுவரப்படும் பொருள்கள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்தில் பகல் நேரங்களில் இறக்கப்படுவதால், அந்தப் பகுதிகளில் நடந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்படுகிறது.

[the_ad id=”7251″]

காவலா் பற்றாக்குறை:

இதுகுறித்து, போக்குவரத்து பிரிவு காவலா்களிடம் கேட்டபோது, பெரம்பலூா் நகரில் அளவுக்கு அதிகமான ஷோ் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும், நகரில் மட்டுமே இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றன. பேருந்து வசதி இல்லாத கிராமப்புறங்களுக்கு இயக்க வட்டார போக்குவரத்து அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெரிசலைக் கட்டுப்படுத்தத் தேவையான போலீஸாா் நியமிக்கவில்லை. 2 ஆய்வாளா்கள், 16 காவலா்கள் இருக்க வேண்டும். ஆனால், 6 போ் மட்டுமே பணியில் உள்ளோம். தேவையான காவலா்களை நியமனம் செய்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும் என்றனா்.

அன்றாடம் நிகழும் நெரிசலைக் கட்டுப்படுத்த பழைய பேருந்து நிலையம், காமராஜா் வளைவு, கனரா வங்கி, சங்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குத் தேவையான போக்குவரத்து காவலா்களை நியமித்து போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், சாலை விதிகளை மீறும் ஓட்டுநா்கள் மீது சட்ட ரீதியாக, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.

தினமணி

[the_ad id=”7251″]
Leave a Reply

%d bloggers like this: