குழப்பத்தில் பெரம்பலூர் மாணவர்கள் : அறிவிப்பு எப்போது? 

குழப்பத்தில் பெரம்பலூர் மாணவர்கள்: அறிவிப்பு எப்போது? 

284

குழப்பத்தில் பெரம்பலூர் மாணவர்கள் : அறிவிப்பு எப்போது?

Perambalur students in chaos: When is the announcement?

கடந்த 4 மாத காலமாக கொரோனா தொற்றுப் பரவலால் உலகமே பல லட்சக்கணக்கான உயிர்களை இழந்து தவித்து வருகிறது. நம் நாட்டிலும் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு முதல் முகக்கவசம் அணிவது வரை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த கொரோனா தொற்றால் நாட்டின் எல்லா துறைகளிலுமான வளர்ச்சி தடைபட்டுள்ள நிலையில், கல்வித் துறையில் அதன் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் மாணவர்களின் நலன் காக்கும் பொருட்டு, கடந்த 3 மாத காலமாக அனைத்து விதக் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளித்ததோடு மட்டுமில்லாமல், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வையும் அரசு ரத்து செய்தது.

இந்நிலையில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கப்படும் பள்ளி மற்றும் இதர கல்வி மையங்கள் திறக்கப்பட தடை விதிக்கப்பட்டு, தேதி எதுவும் அறிவிக்காமல் அரசு தள்ளி வைத்திருக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. ஆனால் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எல்லாவகையிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் அருகே சரக்கு ஆட்டோ, பைக் மோதி வாலிபர் பலி

சில செய்தி ஊடகங்கள், 2021 ஜனவரியில்தான் இனி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கப்படும் என்பது போன்ற ஊர்ஜிதமற்ற செய்திகளைப் பரப்பி வருகின்றன. இது குறித்து தமிழக அரசு எந்த ஒரு முறையான அறிக்கையையும் இதுவரை வெளியிடாத நிலையில், பெரம்பலூர் மாவட்டம் முழுக்க உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பாட நூல்கள், பெரம்பலூர் அரசு புத்தகக் கிடங்கிலிருந்து சரக்கு வாகனங்களின் மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் விநியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், இப்பாடப் புத்தக விநியோகப் பணி, பெற்றோர்களையும் மாணவர்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனவே அனைவரின் குழப்பத்தையும் தீர்க்கும் விதமாகவும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை அரசு தெளிவாக அறிவிக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆகவே மக்களை குழப்பத்தில் வைத்திருக்காமல் விரைவில் இது குறித்த அறிவிப்பை அரசு வெளியிடுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ச.மோகன்

tags: perambalur
Leave a Reply

%d bloggers like this: