குடிநீர் கிணறு அமைக்கக் கோரி கிராம மக்கள் மனு

குடிநீர் கிணறு அமைக்கக் கோரி கிராம மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு.

52

குடிநீர் கிணறு அமைக்கக் கோரி கிராம மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு.

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வாங்கி கொண்டிருந்தார்.

அப்போது ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் ஜெ.ஜெ. காலனி தெருவை சேர்ந்த கிராமமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தெருவில் காவிரி குடிநீரும் வருவதில்லை. மேலும் தண்ணீர் பிடிப்பதற்கு குழாய்களும் இல்லை. இதனால் அடிபம்பில் தண்ணீர் எடுத்து குடித்து வருகிறோம். அந்த அடிபம்பிலும் தண்ணீர் இல்லை. இந்நிலையில் எங்கள் பகுதிக்கு குடிநீர் கிணறு அமைக்க உத்தரவு வந்துள்ளதாம். எனவே மாவட்ட நிர்வாகம் அந்த குடிநீர் கிணறு உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

[quote]20 மற்றும் 21 ம் தேதிகளில் இலவச நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி.[/quote]

வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தி வருகிறோம். இந்நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்துள்ளோம். எனவே ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில், அக்கட்சியினர் நேற்று 100-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து வந்து கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்த மனுவில் பள்ளன், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற அரசாணையை உடனடியாக வெளியிட மாவட்ட நிர்வாகம் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

க.எறையூர் காந்தி நகர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் நகரில் 70 வீடுகள் உள்ளன. ஆனால் எங்கள் நகரின் அருகே உள்ள கிரஷர் எந்திரம் ஓய்வின்றி இயங்கி வருகிறது. இதனால் கிரஷரில் இருந்து வெளியேறும் தூசுகளால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதனால் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதே போல் குன்னம் தாலுகா கோவிந்தராஜப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த 20 பேர் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் நாங்கள் 40 ஆண்டு காலமாக புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வருகிறோம் ஆனால் அந்த நிலத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. எனவே அந்த நிலத்திற்கு நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 287 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்று கொண்டார். அவர் அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்று 3 ஆண்டுகள் நிறை வடைந்ததையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறையால் தயார் செய்யப்பட்ட ஒட்டு வில்லைகளை கலெக்டர் சாந்தா பொதுமக்களின் பார்வைக்காக கலெக்டர் அலுவலகத்தில் ஒட்டியும், அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் தங்களது அலுவலகத்தில் ஒட்டுவதற்காக ஒட்டுவில்லைகளையும் வழங்கினார். மேலும் அவர் சிறுசேமிப்பு துறையின் சார்பில் உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளிடையே சிக்கனம் மற்றும் சேமிக்கும் பண்பினை வளர்க்கும் பொருட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், திட்ட இயக்குனர் தெய்வநாயகி, சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனித்துணை கலெக்டர் சக்திவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் கங்காதேவி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி
Leave a Reply

%d bloggers like this: