பெரம்பலூர் மாவட்டத்துக்கு உகந்த பப்பாளி சாகுபடி: ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

பெரம்பலூர் மாவட்டத்துக்கு உகந்த பப்பாளி சாகுபடி: ஆர்வம் காட்டும் விவசாயிகள்!


கட்டுப்படியான விலை, தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தற்போது பப்பாளி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆற்றுப்பாசனமே இல்லாத பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மானாவாரி சாகுபடியை மட்டுமே நம்பியுள்ளனர். ஒருசில இடங்களில் நெல், வாழை, உளுந்து, மஞ்சள், கரும்பு பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. இருப்பினும், மானாவாரி மற்றும் தோட்டப்பயிர்களாக பருத்தி, சின்ன வெங்காயம், மக்காச்சோளம் சாகுபடி செய்வதில் பெரம்பலூர் மாவட்டம் தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளது.

ஆனால், உரிய விலை கிடைக்காததாலும், பருவம் தவறி பெய்யும் மழையாலும் சின்ன வெங்காயம், பருத்தி மற்றும் மக்காச்சோள சாகுபடியில் போதிய வருவாய் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. மேலும், பல இடங்களில் வறட்சி, திடீர் மழையால் மகசூல் பாதிக்கப்படுகிறது. உர விலை உயர்வு, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், இம்மாவட்டத்தில் பப்பாளி சாகுபடி மீதான ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதேபோல, சுழற்சி முறையில் பயிர்களைச் சாகுபடி செய்தால் மகசூல் அதிகரிக்கும் என்பதால், பெரும்பாலான விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர்.

ஒரே பயிரை மீண்டும் பயிரிடுவதால் வளர்ச்சி பாதித்து மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் மண்ணில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்படுவதோடு நல்ல பலனும் ஈட்ட முடிகிறது.

இதில் பூ, காய்கறி, பப்பாளி சாகுபடியானது விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தருகிறது. இதனால் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் பலன் தரும் பயிர்களுக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். அந்த வகையில், மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம், அரசலூர், கோனேரிப்பாளையம், வேப்பந்தட்டை, பெரம்பலூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பப்பாளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சிலர் கூறியது:

பல்வேறு பயிர்களைச் சாகுபடி செய்து, போதிய வருவாய் கிடைக்காததால் தற்போது பப்பாளி சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. பப்பாளி சாகுபடி செய்ய ஏக்கருக்கு 400 கிராம் விதை பயன்படுத்தப்படுகிறது. சிந்தா, ரெட்லேடி வகைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

பப்பாளி நடவு செய்த 7 மாதங்களில் அறுவடை செய்ய முடியும். சீரான நீர்ப் பாசனம் தேவை என்பதால், விவசாயிகள் பெரும்பாலும் சொட்டு நீர்ப் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். சாதாரண முறையில் சாகுபடி செய்யும்போது களைச்செடிகள் அதிக அளவில் முளைக்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு முதலீட்டுச் செலவு அதிகமாகிறது.

ஏக்கருக்கு ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்பதால், பெரும்பாலான விவசாயிகள் பப்பாளி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுமக்களிடம் தற்போது பப்பாளி பழங்களுக்கு நல்ல வரவேற்புள்ளதால், விற்பனையிலும் பிரச்னை இல்லை. அறுவடையை பொருத்தவரை மொத்த வியாபாரிகளே நேரடியாக வயல்களுக்கு வந்து வாங்கிச் செல்கிறார்கள். பெரும்பாலான விவசாயிகள் தங்களது வாகனங்கள் மூலமாக நேரடியாக வாரச்சந்தை, தினசரி சந்தைகளுக்கும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும் சென்று விற்பனை செய்கின்றனர். விவசாயிகளிடம் சில்லரை விலையில் ஒரு பழம் ரூ. 15 முதல் ரூ. 20 வரையிலும், வியாபாரிகளிடம் கிலோ ஒன்று ரூ. 15-க்கும் விற்கப்படுகிறது. வறட்சி மிகுந்த தற்போதைய காலக்கட்டத்தில் பப்பாளி சாகுபடியானது விவசாயிகளுக்கு உகந்ததாக உள்ளது என்றனர்.

தினமணி

204total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: