அதிகபாரம் ஏற்றிச்சென்ற லாரிகள் பறிமுதல் செய்து ரூ.5 லட்சம் அபராதம்.
Overweight lorries confiscated and fined Rs 5 lakh.
வாகன சோதனை
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏராளமான கல் குவாரிகளும், ஜிப்சம் குவாரிகளும் உள்ளன. இவற்றில் சிலவற்றுக்கு மட்டுமே ஏலம் விடப்பட்டுள்ளது. பல குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கட்டிட கட்டுமான பொருட்கள் தேவையை நிறைவேற்றும் வகையில் முக்கிய பொருட்களான அரளைக்கற்கள், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கல்குவாரி பொருட்கள் அதிக அளவில் கட்டிட கட்டுமானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
அந்தவகையில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலக சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கனரக லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச்செல்வதாக வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் பெரம்பலூர்- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரளி சுங்கச்சாவடி அருகே டிப்பர் லாரிகளை நிறுத்தி திடீர் வாகன சோதனை நடத்தினர்.
10 லாரிகள் பறிமுதல்
இந்த சோதனையில் டிப்பர் லாரிகளில் பெரிய கற்கள், ஜல்லிக்கற்கள், எம்.சேண்டு போன்ற பொருட்களை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவில் ஏற்றிச்சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக 10 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
அரசு விதிமுறைகளை மீறி அதிக அளவில் பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களை அவ்வப்போது கண்டறிந்து, அபராதம் விதிப்பதுடன் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தினத்தந்தி
Keywords: Overweight lorries confiscated,
You must log in to post a comment.