New Dubai Bridge Reduces Travel Time to 7 Minutes
துபாயின் முக்கிய சாலையான ஷேக் முகமது பின் சையத் சாலையில் (E311) இருந்து ஜுமேரா கோல்ஃப் எஸ்டேட் மற்றும் துபாய் ப்ரொடக்ஷன் சிட்டிக்கு செல்லும் சர்வீஸ் சாலைக்கு போக்குவரத்தை பிரிக்கும் புதிய பாலம் ஜூன் 9ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாலம், ஒரு மணி நேரத்திற்கு மூன்றாயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் வரை செல்லும் திறன் கொண்டது.
இந்த பாலம், கார்ன் அல் சப்கா மற்றும் ஷேக் முகமது பின் சையத் (E311) சாலையின் இணைப்பை மேம்படுத்த துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மேற்கொண்ட பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். புதிய பாலத்தின் பயன்பாட்டின் மூலம், ஷேக் முகமது பின் சையத் சாலையில் இருந்து ஜெபல் அலி போர்ட்டை நோக்கி பயணிக்கும் வாகன ஓட்டிகளின் பயண நேரம் 21 நிமிடங்களில் இருந்து 7 நிமிடமாக குறையும் என RTAவின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர், இயக்குனர் ஜெனரல் மத்தார் அல் டேயர் தெரிவித்தார்.
நான்கு பாலங்களை உள்ளடக்கிய மாபெரும் போக்குவரத்து திட்டம்
துபாயில் உள்ள முக்கிய சாலைகள், ஷேக் சையத் சாலை, ஷேக் முகமது பின் சையத் சாலை, ஃபர்ஸ்ட் அல் கைல் சாலை மற்றும் அல் அசயேல் சாலைகளுக்கு இடையே போக்குவரத்தை எளிதாக்கும் நான்கு பாலங்களை உள்ளடக்கிய போக்குவரத்து திட்டம் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், ஷேக் சையத் மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலைகளுக்கு இடையே முக்கிய இணைப்பை ஏற்படுத்தும்.
இத்திட்டம் முழுமையாக நிறைவடைந்த பின்னர், கார்ன் அல் சப்கா ஸ்ட்ரீட்டில் இருந்து ஷேக் முகமது பின் சையத் சாலைக்கு அல் குசைஸ் மற்றும் தேராவை நோக்கி பயணிக்கும் குடியிருப்பாளர்களின் பயண நேரம் 20 நிமிடங்களில் இருந்து 12 நிமிடமாக குறையும் என RTA தெரிவித்துள்ளது.
மற்ற மூன்று முக்கிய பாலங்கள்
RTAவின் தகவலின் படி, கார்ன் அல் சப்கா ஸ்ட்ரீட் மற்றும் அல் அசயேல் ஸ்ட்ரீட் சந்திப்பில் உள்ள இருவழிப் பாலம் இரு திசைகளிலும் மணிக்கு 8,000 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது. இது ஷேக் சையத் மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலைகளுக்கு இடையே போக்குவரத்தை எளிதாக்கும்.
மற்றொரு இருவழிப் பாலம், கார்ன் அல் சப்கா ஸ்ட்ரீட்டிலிருந்து கிழக்கே ஷேக் முகமது பின் சையத் ஸ்ட்ரீட்டுக்கும், வடக்கே அல் குசைஸ் மற்றும் தேராவுக்கும் போக்குவரத்துக்கு சேவை செய்யும். இந்த பாலம் ஒரு மணி நேரத்திற்கு மூவாயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது.
மூன்றாவது இருவழிப் பாலமானது, ஷேக் முகமது பின் சையத் சாலை வாகனங்கள் வடக்கே அல் யாலேயஸ் ஸ்ட்ரீட்டிலிருந்து ஜெபல் அலி போர்ட்டை நோக்கிச் செல்லும் குறுக்கீட்டை நீக்கி, போக்குவரத்தை அதிகரிக்கிறது. இதுவும் ஒரு மணி நேரத்திற்கு 3,200 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது.
இந்த திட்டங்களின் மூலம், துபாயில் போக்குவரத்து மிகுந்த நேரங்களில் கூட சாலைகளில் வாகன நெரிசலை குறைத்து, பயணிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் செல்ல உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Keywords: New Dubai Bridge,
ALSO READ:
துபாய் விமான நிலையத்தில் ஹஜ் பயனிகளுக்காக சிறப்பு கவுன்டர்கள்
கத்தார்: மானியத்துடன் கூடிய குர்பான் ஆடுகள் விற்பனை
ஈத் அல் அதா விடுமுறையை கொண்டாட எட்டு கடற்கரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஹஜ்ஜின் போது சராசரிக்கும் அதிகமான வெப்பம் இருக்கும் என எச்சரிக்கை!