Kanimozhi MP

பெரம்பலூர் மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. பிரசாரம்.

275

பெரம்பலூர் மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. பிரசாரம். Kanimozhi MP in Perambalur district Election campaign.

பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூரில் குன்னம் தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் ம.பிரபாகரன் ஆகியோரை ஆதரித்து நேற்று காலை கனிமொழி எம்.பி. பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலம், அரசு மருத்துவ கல்லூரி திட்டம் உடனடியாக கொண்டு வரப்படும். வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும். கீழப்புலியூரில் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வரப்படும். செங்குணம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்படும்.

கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம்

தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் விபத்துகள் நடைபெறுவதால் 24 மணி நேர மருத்துவமனை அமைக்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும்.

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்றவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு 75 சதவீத வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

பா.ஜ.க.வின் பினாமி ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுகிறது. அவருக்கு தோல்வி பயம் வந்து சாபம் விட்டு வருகிறார். வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் அதிகமாக விளம்பரம் செய்யப்படுகிறார். அதோடு எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி வீட்டார்கள் கோடிக்கணக்கில் காண்டிராக்ட் எடுத்து வருமானம் பார்த்து வருகின்றனர். அமைச்சர்களும் இதேபோல் வருமானம் பார்த்து வருகின்றனர்.

இந்த ஆட்சியில், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. உயர் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாகவே காவல்துறையில் உரிய நடவடிக்கை இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் மாவட்டந்தோறும் பெண்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு என தனி நீதிமன்றம் அமைத்து வழக்குகளை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தி.மு.க. வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

சந்தர்ப்பவாத கூட்டணி

இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கா.சொ.க.கண்ணனை ஆதரித்து கனிமொழி எம்.பி. ஆண்டிமடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. கூட்டணி என்பது கொள்கை கூட்டணி. மக்களுடைய அதிகாரத்தை, உரிமைகளை, தமிழ்நாட்டு உரிமைகளை, தமிழ்நாட்டு பெருமைகளை, தமிழ்மொழியை, தமிழ் அடையாளங்களை, சமூகநீதியை காப்பாற்றுவதற்காக ஒன்றாக நின்று செயல்படக்கூடிய கூட்டணி. நமக்கு எதிரணியில் நிற்கக் கூடியவர்கள் ஒருவரை ஒருவர் எவ்வளவு கொச்சையாக பேசிக்கொண்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அது தேர்தலுக்கு தேர்தல் சந்தர்ப்பவாதத்திற்காக இருக்கக்கூடிய கூட்டணி. தங்களை வளர்த்து கொள்வதற்காக தங்களுக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி.

இங்கே நிற்கக்கூடிய பா.ம.க. வேட்பாளரின் தலைவர்களில் ஒருவர் மக்களவைக்கும் வந்ததில்லை, மாநிலங்களவைக்கும் வருவது கிடையாது. அமைச்சர்கள், முதல்-அமைச்சர் உள்பட அனைவர் மீதும் வழக்குகள் உள்ளன. அந்த வழக்கை சந்திக்க கூடிய தைரியம் கிடையாது. அதனால் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தார்கள். விவசாயிகளை கொண்டுபோய் கார்ப்பரேட் கம்பெனிகளில் அடகு வைக்கும் வேளாண் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்தது. டெல்லியில் தமிழ்நாட்டையே அடகு வைத்து விட்டார்கள். எல்லா முடிவுகளையும் டெல்லிதான் எடுத்துக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டை இந்த தேர்தலில் நாம் மீட்டெடுக்க வேண்டும். தமிழ்நாட்டை தமிழ்நாட்டில் இருந்து ஆள வேண்டும். அந்த உணர்வோடு இந்த தேர்தலிலே தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். முதல்-அமைச்சர் பழனிசாமிக்கு வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்துவிட்டது. அவரை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது.

பல்வேறு திட்டங்கள்

தமிழ்நாட்டில், அரசு பணிகளில் தமிழ் பேசத்தெரியாத வட மாநிலத்தவர்கள் பணிபுரிகின்றார்கள். இங்கு இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரிகளின் பணிக்கு வேற்று மாநிலத்தவர்கள் தேர்வெழுதி பணிக்கு வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. அவர்களிடம் எந்த மொழியில் புகார் கொடுப்பது. இப்படி ஒரு நிலை வரக்கூடாது. எனவே தமிழ்நாட்டில் காலியாக இருக்கக்கடிய 3 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 75 சதவீத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன் உள்ளிட்ட கடன்கள் ரத்து செய்யப்படும். மேலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும். கருணாநிதி ஆட்சியில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்து நிறைவேற்றப்படும், என்றார்.

keywords: Kanimozhi MP, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
%d bloggers like this: