ஒரு கவிதை எழுதினேன் – கிணறு – மோகன். ச

75

ஒரு கவிதை எழுதினேன் – கிணறு


இத்தனை வயதுவரை
வீடு கட்டாமல் போனது
என்னுடைய இயலாமை.
என் தந்தை கட்டிவைத்த
கிருஷ்ணவேணி இல்லம்
என் தலைமுறைக்குப்
போதுமானது.

அம்மாவின் பெயரை
ஆசைப்பட்டுத்தான்
வைத்தாரா
அல்லது நிர்பந்தத்தில்
வைத்தாரா என்பதை
செத்துப்போன அப்பா
என்றேனும் கனவில்
வரும்போதுதான்
கேட்கவேண்டும்.

பழைய வீடென்றாலும்
கிணற்றுடன் வாய்த்தது
என் அதிர்ஷ்டம்.
எந்தக் கோடையிலும்
வற்றியதாக
ஞாபகமில்லை.

குடித்தது, குளித்தது,
துவைத்தது, துலக்கியது
என என் குடும்பத்தின்
எல்லா விதமான
நீர் தேவைக்கான
ஆதாரமாயிருந்தது.

என் அத்தைக்காரி
அதன் உருளை விட்டத்தில்
தூக்குமாட்டிச்
செத்தத்திலிருந்து
கம்பிக் கிராதியிட்டு
மூடிவிட்டோம்.

வாளிக் கயிறு,உருளை…
வார்தைகளெல்லாம்
புரியாத
சொற்களாகிவிட்டன
என் குழந்தைகளுக்கு.

இன்று யார் வீட்டிலேனும்
கிணறு இருந்தால், எனக்கு
சொல்லுங்களேன் கொஞ்சம்.

 

மோகன். ச
Leave a Reply

%d bloggers like this: