பேஸ்புக்கில் நட்பாக பழகி நூதன மோசடி.
Innovative scam
உளுந்தூர்பேட்டை-பெரம்பலூர் இடையே இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் குழாய் மூலம் கியாஸ் கொண்டு செல்ல குழாய்கள் பதிக்கும் பணி சிறுவாச்சூர் அருகே நடந்து வருகிறது. இதில், அந்த நிறுவனத்தின் பொறியியல் பிரிவு கண்காணிப்பாளராக பஞ்சாப் மாநிலம் ஜோஷியாபூர் பகுதியைச் சேர்ந்த பருல் சர்மா (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவரது முகநூல்(பேஸ்புக்) கணக்கில் ஜோசப் ஸ்மித் என்பவர் நட்பாக இணைந்து, ஆன்லைன் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். இந்தநிலையில் ஜோசப் ஸ்மித், பருல் சர்மாவை ஆன்லைனில் தொடர்பு கொண்டு உங்களுக்கு ஒரு சர்ப்பரைஸ்(இன்ப அதிர்ச்சி) தரப் போகிறேன். உங்களை தேடி ஒரு அன்பளிப்பு பார்சல் வரும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
நூதன முறையில் மோசடி:
அதனைத்தொடர்ந்து ஓரிருநாளில் மற்றொருவர் செல்போன் மூலம் பருல்சர்மாவை தொடர்பு கொண்டு, ஐரோப்பியாவில் இருந்து உங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் ஆபரணங்கள், ஆடைகள், யூரோ டாலர்கள் உள்ளதாகவும், அந்த பார்சல் தற்போது புதுடெல்லியில் உள்ள விமான நிலையத்தில் இருப்பதாவும், அதனை பெறுவதற்காக சுங்கவரி மற்றும் இதர வரிகள் என ரூ.83 ஆயிரம் செலுத்தவேண்டும் என்று பருல் சர்மாவிடம் கூறியுள்ளார்.
அதனை நம்பிய, பருல் சர்மா தனது கூகுள்-பே மற்றும் போன்-பே மூலம் ரூ.83 ஆயிரத்தை புதுடெல்லியில் பார்சல் வந்திருப்பதாக கூறியவரின் வங்கி கணக்குக்கு செல்போனில் இரு தவணைகளாக செலுத்தி உள்ளார்.
சைபர் கிரைம் போலீசார் விசாரணை:
ஆனால், அவருக்கு எந்த பார்சலும் வரவில்லை. தான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பருல்சர்மா இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பரிவர்த்தனை ஆதாரங்களுடன் புகார் அளித்தார். அதன்பேரில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், பருல் சர்மாவை செல்போனில் தொடர்புகொண்டு பேசியவரின் இடம் அரியானாவை காட்டியது. அங்குள்ள வங்கிக்கணக்கில் தான் பணம் பரிவர்த்தனை நடந்துள்ளது. அந்த கும்பல் இதுபோன்று பலரிடம் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. பின்னர், அந்த வங்கிக் கிளைக்கு இமெயில் மூலம் தொடர்பு கொண்ட போலீசார், பருல் சர்மாவை ஏமாற்றிவரின் வங்கி கணக்கை முடக்கி வைக்க நடவடிக்கை எடுத்தனர். அடுத்த கட்டமாக அந்த வங்கிக்கணக்கு வைத்துள்ளவரை கைது செய்து, பணத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
You must log in to post a comment.