அரசு வேலை வழிகாட்டி தொடர்-4
How to prepare for Jobs?
இந்த மாத இதழில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 & 2ஏ (நேர்முகத்தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வைப் பற்றிக் காண இருக்கின்றோம்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வரை குரூப்-2 தேர்வு தனியாகவும் குரூப்-2ஏ தேர்வு தனியாகவும் நடைபெற்று வந்தன. அதன் பிறகு TNPSC இரண்டு தேர்வுகளையும் ஒருங்கிணைத்து ஒரே தேர்வாக நடத்தத் திட்டமிட்டு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தது. ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த ஒன்றிணைக்கப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் குறித்து TNPSC-யினால் மறுபரிசீலனை செய்யப்படுவதாக செய்திகள் கிடைக்கின்றன.
நாம் தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைக்கப்பட்ட குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளைப் பற்றிக் காண்போம்.
இந்த தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும் (குருப் 2ஏ தேர்வுக்கான பதவிக்கு மட்டும் நேர்முகத் தேர்வு கிடையாது) அதாவது
1. முதல்நிலை தேர்வு (Preliminary Exam)
2. முதன்மைத் தேர்வு (Main Exam)
3. நேர்காணல் (Interview) ஆகிய மூன்று கட்டங்களாக நடைபெறும்.
1.முதல்நிலை தேர்வு:
இந்த தேர்வு 200 வினாக்களைக் கொண்ட கொள்குறிவகை (Objective Type) தேர்வாகும். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண் எனக் கணக்கிட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த முதல்நிலை தேர்வு என்பது ஒரு Screening Test என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த முதல்நிலைத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. எளிமையாகச் சொல்வது என்றால் குருப் 1 முதல்நிலை தேர்வு போன்றே இத்தேர்வும் நடைபெறும். முதல்நிலைத் தேர்விலிருந்து முதன்மை தேர்விற்கு 1:20 என்ற விகித முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். உதாரணமாக 50 நபர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் என்றால் 1000 நபர்கள் முதல்நிலைத் தேர்விலிருந்து முதன்மைத் தேர்விற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் இன்னொரு விஷயத்தை நாம் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது சிறுபான்மையினர்கள் இந்த முதல்நிலைத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறும் பட்சத்தில் அவர்கள் முதன்மை தேர்வுக்குத் தயாராவதற்கு ரூபாய் 25 ஆயிரம் உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
2.முதன்மைத்தேர்வு:
முதன்மை தேர்வை பொறுத்தவரையில் இரண்டு பகுதிகளாக (Part A & Part B) நடைபெறும். இந்த தேர்வு விரிவாக விடையளிக்கும் (Descriptive type) தேர்வாகும். Part A தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இதில் குறைந்தது 25 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் அப்போதுதான் Part B தேர்வுக்கான விடைத்தாள் திருத்தப்படும். Part B தேர்வு மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் ஆக மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்த முதன்மைத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்த கட்டமான நேர்முகத்தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
3.நேர்முகத் தேர்வு:
இந்த தேர்வைப் பொருத்தவரை 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு (300+40 =340) ஆகிய தேர்வுகளில் எடுக்கப்படும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்களுக்குப் பணி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
நாம் முன்னரே குறிப்பிட்டது போல் இது குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் ஒன்றிணைக்கப்பட்ட தேர்வு என்பதனால் குரூப்-2 தேர்வில் அடங்கிய பதவிகளுக்கு மட்டும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு மொத்தமாக 340 மதிப்பெண்கள் கணக்கிடப்படும். அதேபோல் குரூப்-2ஏ தேர்வில் அடங்கிய பதவிகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படாது மாறாக முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டு அதில் முதன்மைத் தேர்வுக்கான 300 மதிப்பெண்கள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் இந்த இரண்டு தேர்வுகளுக்கும் ஒரே தேர்வு ஒரே பாடத்திட்டம் என்பதை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். ஒரே ஒரு வித்தியாசம் குரூப்-2 பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் குரூப்-2ஏ பதவிகளுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறாது.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழக மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் தமிழ் மொழிப் பாடம் ஒரு தகுதித் தேர்வாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே நாம் மேல் கூறிய தேர்வு நடைமுறைகளில் மாற்றம் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டல்களை TNPSC மிக விரைவில் தெரியப்படுத்தும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
ஊதியம்:
இத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் ஊதியங்களைப் பற்றிப் பார்ப்போம். Level 10 (20,600 – 65,500), Level 11, 12 என அதிகபட்சம் ஊதியமாக Level 19 (37,200 – 1,17,600) வரை பதவிகளுக்கு ஏற்றார் போல ஊதியம் வழங்கப்படுகிறது.
பதவிகள்:
இந்த தேர்வின் மூலம் கீழ்க்கண்ட பதவிகள் டிஎன்பிஎஸ்சி ஆல் நிரப்பப்படுகின்றன.
Probation officer ( நன்னடத்தை அலுவலர்), sub registrar grade 2 (சார்பதிவாளர் நிலை 2), municipal commissioner (நகராட்சி ஆணையர்), assistant section officer (உதவி பிரிவு அலுவலர் ), audit inspector ( தணிக்கை ஆய்வாளர்), Senior inspector (முதுநிலை ஆய்வாளர்), junior employment officer (இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்) மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான பதவியான assistant (உதவியாளர்) போன்ற பணிகள் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
இந்த தேர்வைப் பொருத்தவரை குறைந்தது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் பதவிகளுக்கு ஏற்றார்போல் B.A., B.SC., B.COM., B.B.A., போன்ற பட்டங்கள் முன்னுரிமை தகுதியாகக் கருதப்படும்.
வயது வரம்பு:
குறைந்தது 18,20, 22, 26 வயது முதல் அதிகபட்சமாக 30, 40 வயது வரை பல்வேறு பதவிகளுக்கு ஏற்றார்போல் இந்த வயது வரம்பு மாறுபடும். SC, ST, MBC, BC, BC(M) ஆகிய பிரிவினருக்கு வயது உச்சவரம்பு கிடையாது. அதாவது அவர்கள் 59 வயது வரை இத் தேர்வை எழுதலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்பிலிருந்து கூடுதலாக 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படுகிறது. முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்சமாக 48 வயது வரை தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுகிறது.
தேர்வுக்கட்டணம்:
SC, ST பிரிவினர்கள் , மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்குத் தேர்வு கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் எத்தனைமுறை தேர்வு எழுதினாலும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. MBC, BC , BC(M) போன்ற பிரிவினர்களுக்கு முதல் 3 தேர்வுகளுக்கு மட்டும் கட்டணம் இல்லாமல் இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோன்று முன்னாள் ராணுவத்தினருக்கு முதல் 2 தேர்வுகள் மட்டும் இலவசமாக எழுதுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
பாட திட்டம்:
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் புத்தகங்களில் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களையும், நடப்பு நிகழ்வுகள் (செய்தித் தாள்), திறனாய்வும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude and Mental Ability) போன்ற பாடங்களைப் படித்தால் போதுமானது. இத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பட்டப்படிப்பு தரத்தில் (Degree Standard) இருக்கும். அடுத்த மாத இதழில் குருப்-4 தேர்வு குறித்து விரிவாகப் பார்ப்போம்.
தொடரும்…
Keyword: prepare for Jobs, Government Jobs
You must log in to post a comment.