பெரம்பலூரில் விவசாயிகள் நூதன போராட்டம்.
Farmers protest in Perambalur
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மடியேந்தும் போராட்டம்.
பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன போராட்டமாக மத்திய- மாநில அரசுகளிடம் மடிபிச்சை கேட்பதுபோல் மடியேந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு விவசாய சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் வேணுகோபால், தமிழக விவசாயிகள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் விசுவநாதன், திருச்சி மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் மீண்டும் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமும், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டமும் நடத்திட தமிழக அரசு உத்தரவிட வேண்டும். கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த தொடர் மழையினால் 33 சதவீதம் பாதிக்கப்பட்ட பயிருக்கு அரசு அறிவித்த நிவாரணமும், பாதிக்கப்பட்ட பயிருக்கு காப்பீடு செய்ததற்கு காப்பீடு தொகை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உரத்தின் விற்பனை விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். உர விலையை உயர்த்தக்கூடாது. உரத்தின் விற்பனை விலையை தமிழக அரசு மீண்டும் வேளாண்மை துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்
கடந்த ஆட்சியில் அறிவித்தபடி, கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும். மாவட்டத்தில் சில பகுதிகளில் விதை மாற்றி கொடுக்கப்பட்டதால் சின்ன வெங்காயத்துக்கு பதில், பெரிய வெங்காயம் முளைத்தது. அந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு பெற்று கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது தோள்பட்டையில் கிடந்த துண்டை கையில் பிடித்து மடியேந்தி கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக விவசாயிகள், தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவன தலைவர் நாராயணசாமியின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்த போது போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கும், சமீபத்தில் மறைந்த பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தினத்தந்தி
Keywords: Farmers protest
You must log in to post a comment.