மங்களமேடு அருகே மாயமான விவசாயி பிணமாக மீட்பு. Farmer’s dead body recovery
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள நமையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 52). விவசாயியான இவரும், இவரது மனைவி பச்சையம்மாளும் கடந்த 17-ந் தேதி வயலுக்கு சென்றனர். அப்போது உழவு செய்ய டிராக்டர் அழைத்து வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்ற ராஜேந்திரன் மீண்டும் வயலுக்கு திரும்பவில்லை, வீட்டிற்கும் வரவில்லை.
இதனால் அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து பச்சையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரனை தேடி வந்தனர்.
பிணமாக மிதந்தார்
இந்நிலையில் நேற்று அதே ஊரை சேர்ந்த விவசாயி ஒருவரின் மாடு, அங்குள்ள குளத்தில் மூழ்கி செத்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் மாட்டின் உடலை மீட்க முயன்றபோது, ராஜேந்திரன் அந்த குளத்தில் பிணமாக மிதந்தது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு போலீசார் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் டிராக்டரை அழைத்து வருவதாக கூறிச்சென்ற ராஜேந்திரன் குளத்தில் பிணமாக மிதந்ததற்கான காரணம் என்ன?, குளிக்க சென்று தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Keywords: dead body, recovery, farmer
You must log in to post a comment.