போதை மருந்து ஒரு புற்றுநோய்! Drug use is very danger for our health.
சில நாட்களுக்கு முன்பு வாணியம்பாடியில் சமூக செயற்பாட்டாளர் வாசிம் அக்ரம் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இது தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போதை மருந்து மாஃபியா கும்பல் தமிழகத்தில் நன்கு வேரூன்றி இருப்பதையே அந்த சம்பவம் அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறது. அந்த மாஃபியா கும்பல் தங்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு இதுதான் கதி என்று எச்சரிக்கை செய்யும் விதத்தில் இந்த கொடூர கொலையை நிகழ்த்தியுள்ளது.
கஞ்சா
சமுதாயத்தை சீரழிக்கும் மிகப்பெரிய அபாயமாக கஞ்சா உள்ளிட்ட போதை மருந்து பயன்பாடு இருந்து வருகிறது. நாளுக்கு நாள் அதன் தாக்கம் இளைஞர்களிடத்தில் அதிகரித்து வருவதை அறிந்துகொள்ள முடிகிறது. பாக்கு, புகையிலை, பீடி, சிகரெட், மது என தொடங்கி கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்தில் வந்து நிற்கிறது. போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களில் பெரும்பகுதியினர் இருபது வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பது துயரமான செய்தியாகும்.
13% அதிகரிப்பு
தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் முன்பைவிட 13% அதிகரித்துள்ளதாக தரவுகள் சொல்கின்றன. அரசு போதை மருந்து கும்பலுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை விடுக்கின்றது. சில கைதுகளும், போதை மருந்து கைப்பற்றலும் நடந்துதான் வருகின்றன. இருந்தும் போதை மருந்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் அரசின் உறுதியான நடவடிக்கையின்மையே. கஞ்சா உள்ளிட்ட போதை மருந்து கும்பலுடன் ஆளும் கட்சியினரும், அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் இரகசியமாக கைகோர்த்து கொண்டு செயல்படுவதை பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது.
விழிப்புணர்வு பிரச்சாரங்கள்
அதே நேரத்தில் அரசாங்கத்தால் மாத்திரமே இதை தடுத்திடவும் முடியாது. போதை மருந்து என்கிற புற்றுநோய்க்கு எதிராக; மிகப்பெரிய மாஃபியா கும்பலுக்கு எதிராக பெற்றோர், குடும்பத்தார்கள், சமூகம், சமூக அமைப்புகள், அரசு என அனைவரின் பங்களிப்பும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. சமுதாயத்தில் விழிப்புணர்வுகள் அதிக அளவில் நடைபெற வேண்டும். சமூக அமைப்புகள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வருவது கவனத்தில் கொள்ளவேண்டியது. அதே நேரத்தில் அந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பெற்றோர்கள், மாணவர்கள், இளைஞர்கள், சமூக பெரியவர்கள், அனைத்து சமூக அமைப்புகள் என கூட்டு செயல்பாடாக இருந்தால்தான் அது பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும் என்பதையும் அனைவரும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பதின்பருவ இளைஞர்களே
போதை மருந்து கும்பலின் முதல் குறியாக பதின்பருவ இளைஞர்களே உள்ளனர். அதனால் பெற்றோர்கள் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும். புதிய பழக்க வழக்கங்கள் தங்கள் பிள்ளைகளிடம் தென்பட்டால் உடனே அதற்கான தீர்வை நோக்கி நகர வேண்டும். சில நேரங்களில் பிள்ளைகள் செய்யும் தவறான விடயங்கள் குறித்து பெற்றோர்களிடம் யாராவது கூறினால் ‘என் பிள்ளையை பற்றி தவறாக பேசாதே, போய் உன்வேலையை பார்’ என்று சொல்லிவிடுகிறார்கள். இது தவறான அணுகுமுறை.
போதை மருந்து பயன்பாடு குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நமது பகுதியில் எங்கேனும் போதை மருந்து விற்கப்படுகிறதா? அதை யார் இளைஞர்களுக்கு வழங்குகிறார்கள்? என்பதனை தெரிந்துகொண்டு காவல்துறையின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். போதை மருந்து விற்கும் கும்பலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது அவசியம். இல்லையென்றால் அது மிக சிக்கலான விசயமாக மாறிவிடும்.
நாளடைவில் நினைவாற்றல் குறைந்து விடும்
போதைப் பழக்கத்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு நாளடைவில் நினைவாற்றல் குறைந்து விடும் ஆபத்து இருக்கிறது. இதனால் தனிமையில் இருப்பது, எப்போதும் போதையில் இருப்பது, முரட்டுத்தனமாக நடப்பது போன்ற பழக்கங்கள் அதிகரித்து நாளடைவில் தற்கொலையில் போய் முடிகிறது. போதை மருந்து பழக்கம் உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்வதில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது என்பதை இந்த இடத்தில் பொருத்திப் பார்ப்பது சரியாக இருக்கும்.
இளைஞர்களே! உங்கள் பெற்றோர்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், கனவுகளையும் கலைத்துவிடாதீர்கள். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள். அது உங்கள் வாழ்வையும், உங்கள் குடும்பத்தினர் வாழ்வையும் சீரழித்து விடும். போதை மருந்து ஒரு புற்றுநோய் போன்றது. அது கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வாழ்வையே துன்பமயமாக்கி இறுதியில் அழித்துவிடும். எச்சரிக்கையுடன் இருங்கள்.
– வி. களத்தூர் பாரூக்
Keywords: Drug use is very danger, drug use
You must log in to post a comment.