ஆசிரியை கொலை வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.
Double life sentence
பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதி மாலா நகரை சேர்ந்தவர் சேட்டு. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மகள் கமருன்னிஷா (வயது 31). இவர் குன்னம் அருகே உள்ள இலந்தகுழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை பார்த்தார். கமருன்னிஷாவை பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த செல்லமுத்துவின் மகன் ஆனந்த் (33) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் ஆனந்தின் காதலை கமருன்னிஷா ஏற்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் தனது நண்பரான பெரம்பலூர் எடத்தெருவை சேர்ந்த அரவிந்த் என்ற அப்பாக்குடன் (22) சேர்ந்து கடந்த 14.8.2018 அன்று காலை அல்லிநகரத்தில் இருந்து பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்ற கமருன்னிஷாவை தொண்டப்பாடியில் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். இது தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த், அரவிந்த் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்து ஆனந்த், அரவிந்த் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று மகிளா கோர்ட்டு நீதிபதி கிரி தீர்ப்பளித்தார். இதில் ஆனந்த், அரவிந்துக்கு கமருன்னிஷாவை கொலை செய்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும் என இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும், மேலும் அவர்களுக்கு அபராதமாக தலா ரூ.57 ஆயிரத்து 500 விதித்தும், அபராதம் செலுத்த தவறினால் அவர்கள் மேலும் தலா ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இரட்டை ஆயுள் தண்டனையை அவர்கள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
இதையடுத்து ஆனந்த், அரவிந்தை குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
தினத்தந்தி
Keywords: culprits, Perambalur News
You must log in to post a comment.