Deer burnt

பெரம்பலூர் அருகே குட்டியுடன் தீவைத்து எரிக்கப்பட்ட மான்.

355

பெரம்பலூர் அருகே குட்டியுடன் தீவைத்து எரிக்கப்பட்ட மான். Deer burnt with calf near Perambalur

பெரம்பலூர் அருகே அரணாரை கிராமத்தில் உள்ள அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 60). அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமான காலிமனை, அந்த கிராமத்தில் இருந்து ரெங்கநாதபுரம் செல்லும் சாலையில் மருதையான் கோவில் அருகே உள்ளது.

அந்த காலிமனையில் கிடந்த சோளத்தட்டைகளில் நேற்று மாலை ஒரு பெண் மான் மற்றும் அதன் குட்டி தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தன. இதில் பெண் மான் முற்றிலும் எரிந்த நிலையிலும், அதன் குட்டி சற்று எரிந்த நிலையிலும் கிடந்தன. மேலும் தொப்புள் கொடி அறுபடாத நிலையில் குட்டி மான் கிடந்தது. இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கும், பெரம்பலூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கும் தகவல் அளித்தனர்.

விசாரணை

அதன்பேரில் அங்கு பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார், மாவட்ட வன அலுவலர் குகனேசன் தலைமையில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் தீயில் எரிந்து கிடந்த மான்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இறந்த பெண் மானுக்கு 3 வயது இருக்கும் என்றும், அதன் குட்டி ஆணா?, பெண்ணா? என்பதனை சம்பவ இடத்தில் கண்டறிய முடியவில்லை என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து மானின் உடல்களை மீட்ட வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மின்வேலி

மேலும் அந்த பகுதியை வனத்துறையினர் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த காலிமனை அருகே, அதே பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் (50), பழனியாண்டி, மாரிமுத்து ஆகியோருக்கு சொந்தமான வயலில் நெல் பயிரிடப்பட்டுள்ளதும், வயலையொட்டி அமைக்கப்பட்டுள்ள மின்வேலி அறுந்து கிடந்தது, தெரியவந்தது.

மேலும் அந்த வயலையொட்டி தண்ணீரின்றி உள்ள வாய்க்காலில் மானின் ரத்தக்கரை படிந்துள்ளது.

இறைச்சிக்காக அறுத்தார்களா?

இதனால் வனப்பகுதியில் இருந்து வழிதவறி தண்ணீர் தேடி வயலுக்கு வந்த கர்ப்பிணி மான் மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கலாம். இதனை கண்ட மர்மநபர்கள் அந்த மானை இறைச்சிக்காக அறுத்தபோது, அதன் வயிற்றில் மான் குட்டி இருந்ததை கண்டதும், இறந்த மானையும், குட்டியையும் அருகே உள்ள காலிமனையில் சோளத்தட்டையில் போட்டு தீயிட்டு கொளுத்தி விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து சென்றிருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி, இந்த செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மின்வேலி அமைக்கப்பட்டுள்ள வயலின் உரிமையாளர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.

சரணாலயம் அமைக்க வேண்டும்

பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள் உள்ளன. இந்த மான்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் வழி தவறி ஊருக்குள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் மான்கள் தெரு நாய்களால் கடித்து குதறப்பட்டும், சாலை விபத்துகளில் சிக்கியும் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே வனவிலங்கு ஆர்வலர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மான்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் பெரம்பலூர் மாவட்டத்தில் மான்களுக்கு சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

keywords: Deer burnt, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: