வி.களத்தூரில் கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் மரணம்.
Death of a teenager
வி.ளத்தூரில் கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் மேட்டுச்சேரியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் கனகராஜ்(வயது 27). இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் இரவு நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடினர். அப்போது வி.களத்தூர் ஏரிக்கு அருகில் உள்ள கிணற்றின் மேல்பகுதியில் கனகராஜ் அணிந்திருந்த காலணி மற்றும் உடைகள் இருந்தது தெரியவந்தது. இதனால் கனகராஜ் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவருடைய குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி, கனகராஜை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் தண்ணீருக்குள் இருந்து கனகராஜை பிணமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டு, மேலே கொண்டு வந்தனர். அவருடைய உடலை வி.களத்தூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Keywords: Death of a teenager
You must log in to post a comment.