குன்னம் அருகே தூங்கிய பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு.
Chain flush from sleeping woman
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள புதுவேட்டக்குடி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 36). விவசாயி. இவரது மனைவி வெண்ணிலா (26). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டிற்கு வெளியே உள்ள திண்ணையில் படுத்து அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தனர்.
அப்போது நள்ளிரவில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் 4 பேர் டவுசர் மட்டும் அணிந்த நிலையில் முகத்தை துணியால் மறைத்து கட்டிக் கொண்டு அங்கு வந்துள்ளனர். அதில் ஒருவன், திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த வெண்ணிலாவின், கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 பவுன் மதிக்கத்தக்க தாலி கொடி மற்றும் தங்கச் சங்கிலியை பறித்தான்.
தப்பி ஓட்டம்
அப்போது திடுக்கிட்டு எழுந்த வெண்ணிலா சத்தம் போடவே, செல்வராஜ் எழுந்து டவுசர் கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். அப்போது கொள்ளையன் ஒருவன் அங்கு கிடந்த கடப்பாரையை எடுத்து செல்வராஜை தாக்கினான். மற்றொருவன் குச்சியை எடுத்து செல்வராஜின் கை மற்றும் மார்பு பகுதியில் தாக்கினான்.
பின்னர் டவுசர் கொள்ளையர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்தர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட டவுசர் கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தினத்தந்தி
Keywords: Chain flush, Perambalur News
You must log in to post a comment.