4 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் ஆசிரியருக்கு மரண தண்டனை உறுதி.

Hits: 0

4 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் ஆசிரியருக்கு மரண தண்டனை உறுதி.

நான்கு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரை மார்ச் 2-ம் தேதி தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மத்தியபிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திலுள்ள பள்ளியில் ஆசிரியர் மகேந்திர சிங் கோன்ட் (வயது 28) என்பவர் பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி அக்கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற மகேந்திர சிங், பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றார். படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை மீட்ட கிராமமக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த காரணத்தால் மத்தியபிரதேச அரசு சார்பில் விமானம் மூலம் சிறுமி டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தப்பியோடிய ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டை போலீஸார் கைது செய்து சாத்னா கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிந்த நிலையில் மகேந்திர சிங்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மத்தியபிரதேச உயர் நீதிமன்றத்தில் மகேந்திரசிங் கோன்ட் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அவரை வரும் மார்ச் 2-ம் தேதி ஜபல்பூர் சிறையில் தூக்கிலிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நேற்று இதற்கான உத்தரவை சாத்னா மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், ஜபல்பூர் மத்திய சிறைக்கு அனுப்பியுள்ளது. இந்த உத்தரவு கிடைத்துள்ளது என்றும், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முடிந்த பின்னர் மகேந்திர சிங் கோன்ட்டுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் ஜபல்பூர் மத்திய சிறை சட்ட அதிகாரி அசோக் சிங் நேற்று செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தது.

அந்த சட்டத்தின் கீழ் மத்தியபிரதேச மாநிலத்தில் சிறுமியை கற்பழித்த வழக்கில் வழங்கப்பட்ட 9-வது தூக்கு தண்டனை இதுவாகும். இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டால் புதிய சட்டத்தின்படி தூக்கு தண்டனை நிறைவேற்றிய முதல் மாநிலமாக மத்தியபிரதேசம் இருக்கும்.

நன்றி - தி ஹிந்து



Leave a Reply

%d bloggers like this: