2 கருப்பைகள் கொண்ட இளம்பெண் : ஆஸ்திரேலியாவில் அதிசயம்

2 கருப்பைகள் கொண்ட இளம்பெண் : ஆஸ்திரேலியாவில் அதிசயம்


ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் லாரன் காட்டர் (வயது 34). ஆரம்ப பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். இவருக்கு 16 வயதானபோது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. மாதவிலக்கு பிரச்சினையால் அவர் அவதியுற்றார். பி.சி.ஓ.டி. என்றழைக்கப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்சினையும் இருந்துள்ளது.

ஆனால் அவர் ஒரு மருத்துவ நிபுணரை சந்தித்து, ‘அல்டிரா சவுண்ட் ஸ்கேன்’ பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு ‘யூட்ரஸ் டிடெல்பிஸ்’ என்ற பிரச்சினை இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த பிரச்சினை உடைய பெண்கள் மிக அபூர்வம். இவர்களுக்கு கருப்பை, கருப்பை வாய், பெண் உறுப்பு என இனப்பெருக்க உறுப்புகள் இரட்டையாக இருக்கும்.

அவர் திருமணமானாலும் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு குறைவு என்று டாக்டர்கள் கூறினர்.

இருப்பினும் திருமணமாகி இயல்பான தாம்பத்திய வாழ்க்கை நடத்துவதற்கு வசதியாக அவர் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனாலும்கூட, இரட்டை கருப்பை பிரச்சினையால், கருச்சிதைவு நேரவோ அல்லது குழந்தை இறந்து பிறக்கவோ வாய்ப்பு உண்டு என டாக்டர்கள் கூறினர்.

எனினும் லாரன், தனது 17 வயதில் பென் என்பவரை காதலித்தார். இவர்கள் 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பென்னுக்கு மற்றவர்களை போன்று தாங்களும் குழந்தை பெற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தன் ஆசையை மனைவி லாரனிடம் பகிர்ந்து கொண்டார்.

2013ம் ஆண்டு அக்டோபரில் லாரன் கருத்தரித்தார். அவரது வலது புற கருப்பையில் கருத்தரித்தது தெரிய வந்தது. 2014ம் ஆண்டு ஜூன் மாதம் அறுவை சிகிச்சை மூலம் அமேலீ என்ற அழகான பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.

பிறகு 1½ ஆண்டுகள் கழிந்த நிலையில் லாரன், பென் தம்பதியர் இரண்டாவது ஒரு குழந்தை பெற்றெடுக்க விரும்பினர். இம்முறை லாரன் இடது புற கருப்பையில் கருத்தரித்தது. அறுவை சிகிச்சை மூலம் அவர் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த ஆண் குழந்தைக்கு பெயர் ஹார்வி. அதன்பின்னர் கருத்தரிக்க வேண்டாம் என்று கருதி கருத்தடை சாதனம் பயன்படுத்த விரும்பினர்.

ஆனால் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொண்டதால் லாரனுக்கு மைக்ரேன் தலைவலி வந்தது. அதை தொடர்ந்து டாக்டரை சந்தித்து ஆலோசித்தபோது கருத்தடை சாதனத்தை பொருத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவரும் பொருத்திக்கொண்டார். இது 99 சதவீதம் நம்பகமான கருத்தடை சாதனம் என கூறப்படுகிறது.

இருப்பினும் அதை பொருத்திக்கொண்ட நிலையிலும், 3 வாரங்களில் லாரன் மீண்டும் அதிசயமாக கருத்தரித்தார். ஒரே கருப்பையில் இரட்டை கரு இருந்தது தெரிய வந்தது. அவரை தொடர் ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். அவரும் அதை கடைப்பிடித்து வந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் லாரன், மாயா மற்றும் ஈவீ என இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இப்போது இந்த இரட்டை குழந்தைகளுக்கு வயது 15 மாதம். இப்போது லாரன், பென் தம்பதியர் அமேலீ, ஹார்வி, மாயா, ஈவீ என 4 குழந்தைகளுடன் இனிமையான குடும்ப வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இரட்டை இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட பெண் ஒருவர் குழந்தை பெற்று நலமுடன் இருப்பது பற்றிய மேற்கூறிய தகவல்கள் இப்போதுதான் ஊடகத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
Leave a Reply

%d bloggers like this: