Perambalur 01

பெரம்பலூரில் பலத்த மழையால் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

பெரம்பலூரில் பலத்த மழையால் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


பெரம்பலூரில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. வடிகால் வாய்க்கால்களில் அடைப்பு காரணமாக துறைமங்கலம் அவ்வையார்நகர் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பல தெருக்களில் பாதாள சாக்கடை திட்ட மேன்ஹோல்கள் பொங்கி வழிந்ததால் நகர வீதிகளில் துர்நாற்றம் வீசியது.பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக வேளாண்மை தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டதோடு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீருக்கே திண்டாடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எப்போது மழை பெய்யும் என பொதுமக்கள், விவசாயிகள் வானம் நோக்கி காத்து கிடந்த நேரத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 13ம் தேதி 130 மில்லி மீட்டர் மழை பெய்தது.

அதில் குறிப்பாக பெரம்பலூரில் 78 மில்லி மீட்டர், வேப்பந்தட்டையில் 34 மில்லி மீட்டர் பதிவானது குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து கடந்த 16ம் தேதியன்று பெரம்பலூர், வேப்பந்தட்டை பகுதிகளில் தலா 49 மில்லி மீட்டர், தழுதாழையில் 35 மில்லி மீட்டர், புதுவேட்டக்குடியில் 36 மில்லி மீட்டர் என மொத்தம் பெரம்பலூர் மாவட்ட அளவில் 279 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 25.36 மில்லி மீட்டராகும்.இந்நிலையில் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. லேசான சூறைக்காற்று வீச துவங்கினாலும் பின்னர் காற்று எதிர்ப்பின்றி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் சுற்றிலும் தார் சாலைகள், எஸ்பி அலுவலக சாலை ஆகிய இடங்களில் ஆறுகளை போல தண்ணீர் அடித்து செல்லும் காட்சி, நகராட்சி அலுவலகம் முன்பு குளம்போல் தேங்கி நின்ற காட்சி அரசு அலுவலர்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இதைதொடர்ந்து கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பெரம்பலூர் துறைமங்கலம் 3 ரோடு மற்றும் 4 ரோடு இடையே உள்ள அவ்வையார் நகர் பகுதியில் உள்ள மூன்று தெருக்களிலும் பெய்த மழைநீர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை ஓரமாக அமைக்கப்பட்ட கான்கிரீட் தடுப்புச்சுவர் காரணமாக தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்ததாலும் யாரும் தெருக்களில் நடமாட முடியாதவாறு வீடுகளை முற்றுகையிட்டு சூழ்ந்ததாலும் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதனால் அவ்வையார் நகர் பகுதியில் உள்ள 50 வீடுகள் மழைநீர் சூழ்ந்தும், மழைநீர் உட்புகுந்தும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று அப்பகுதியை பார்வையிட்டு பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு சர்வீஸ் சாலை ஓரமாக அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் சுவர்களை இடித்து உடைத்து தண்ணீர் வடிகால் வாய்க்கால் வழியாக பிரிந்து செல்ல ஏற்பாடு செய்தனர்.மேலும் கனமழை காரணமாக பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள வெங்கடேசபுரம் பகுதியிலும், முத்துநகர் பகுதியிலும், வடக்கு மாதிரி சாலையில் உள்ள குறுக்குத்தெருவிலும், இலங்கை அகதிகள் முகாம் அருகே உள்ள அரசு மகளிர் விடுதியை ஒட்டியும் பாதாள சாக்கடை திட்டத்துக்காக அமைக்கப்பட்ட மேன்ஹோல் எனப்படும் திறப்பு வழியாக பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் பொங்கி பொங்கி வெளியேறி நகரின் தெருக்களில் துர்நாற்றம் வீச துவங்கியது. எனவே இப்பகுதியில் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் நகராட்சியின் சுகாதார துறையினர், துப்புரவு பணியாளர்கள் அப்பகுதியில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேபோல் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் கிழக்கு மூளையில் மழைநீர் செல்லும் வாய்க்கால் அடைபட்டு கிடந்ததால் கொட்டி தீர்த்த கனமழை அனைத்தும் அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தின் அருகே உள்ள துறையூர் சாலை வளைவில் குளம் போல் தேங்கி நின்றது.ஒரே நாளில் 2 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக தண்ணீர் வெளியேற முடியாமல் பல இடங்களில் தேங்கி நின்று குளம், குட்டைபோல் காணப்பட்டாலும், வேண்டி காத்திருந்த கனமழை தானாக கொட்டி தீர்த்ததால் பெரம்பலூர் மாவட்ட மக்கள், விவசாயிகள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மலையை கொண்டு விவசாயிகள் நம்பிக்கையுடன் மானாவாரி விதைப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன்Leave a Reply

%d bloggers like this: