அரியலூர் அருகே விவசாயி உயிரோடு எரித்து கொலை.

அரியலூர் அருகே, விவசாயி உயிரோடு எரித்து கொலை செய்யப் பட்டார்.


அரியலூர் அருகே, விவசாயி உயிரோடு எரித்து கொலை செய்யப் பட்டார். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடக மாடிய மனைவி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மத்துமடக்கி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 44), விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா (40). இவர்களுக்கு பிரியா (22) என்ற மகளும், மணிகண்டன் (19) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரியா தனது தந்தைக்கு தெரியாமல், தாயார் மஞ்சுளா ஆதரவோடு வீட்டை விட்டு சென்று பாளையக்குடி கிராமத்தை சேர்ந்த சுந்தர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.


இது தொடர்பாக குணசேகரனுக்கும், அவரது மனைவி மஞ்சுளாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மஞ்சுளா கணவரிடம் கோபித்து கொண்டு நக்கம்பாடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில் குணசேகரன் தனது மனைவியை அழைத்து வருவதற்காக நக்கம்பாடிக்கு சென்றார். அப்போது குணசேகரனுக்கும், மஞ்சளா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குணசேகரன் அருகில் இருந்த வைக்கோல் போருக்கு தீ வைத்து விட்டு, தனது கிராமத்திற்கு சென்று விட்டார்.


இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த குணசேகரனின் மனைவி மஞ்சுளா, அவரது உறவினர்கள் சிலர் நள்ளிரவில் மத்துமடக்கி கிராமத்திற்கு வந்தனர். அப்போது தனது வீட்டு வாசலில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த குணசேகரன் கண்ணில், மஞ்சுளா மற்றும் அவரது உறவினர்கள் மிளகாய் பொடியை தூவி, இரும்பு குழாய் மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த குணசேகரன் வலி தாங்க முடியாமல் தப்பி ஓட முயற்சித்தார்.


ஆனால் ஓடமுடியாததால் குணசேகரன், தன்னை விட்டு விடும்படி, மனைவி உள்ளிட்டோரிடம் கெஞ்சினார். அதனை பொருட்படுத்தாத மஞ்சுளா மற்றும் அவரது உறவினர்கள் குணசேகரன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உயிரோடு எரித்தனர். இதில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.


இதனையடுத்து குணசேகரன் குடி போதையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக மஞ்சுளா கிராம மக்களிடம் கூறி நாடகமாடினார். இதனை நம்பிய கிராம மக்களும், இறந்த குணசேகரன் உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். இந்த நிலையில் குணசேகரன் இறந்து கிடந்த இடத்தில் ரத்தம் உறைந்து கிடப்பதாகவும், எனவே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது அக்காள் கணவர் பழமலை இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.


அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார், தகனம் செய்வதற்கு தயாராக இருந்த குண சேகரனின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோ தனைக் காக ஜெயங் கொண்டம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் சம்பவ இடத்திற்கு ஜெயங்கொண்டம் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) இளஞ்செழியன் வந்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனின் மனைவி மஞ்சுளா மற்றும் மஞ்சுளாவின் தம்பி வேல்முருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் மஞ்சுளாவின் தந்தை துரைசாமி உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கணவர் என்றும் பாராமல், அவரை மனைவியே உயிரோடு தீ வைத்து எரித்து கொலை செய்த பயங்கர சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினத்தந்தி

21total visits,3visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: