விதிமுறைகள் பின்பற்றப்படாததால்

விதிமுறைகள் பின்பற்றப்படாததால் தொற்று அதிகரிக்க வாய்ப்பு

404

விதிமுறைகள் பின்பற்றப்படாததால் தொற்று அதிகரிக்க வாய்ப்பு

பெரம்பலூர் நகர்ப்பகுதியில் உள்ள மளிகை-காய்கறி கடைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படாததால் கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

விதிமுறைகளை பின்பற்றுவதில்லை

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.

ஆனால் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் முழு ஊரடங்கு விதிமுறைகளை வியாபாரிகளும், பொதுமக்களும் பின்பற்றுவதில்லை. முழு ஊரடங்கில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரம்பலூரில் அந்த கடைகளின் முன்பு சமூக இடைவெளி கடைப்பிடிக்க உரிமையாளர்கள் வட்டம் போடுவது இல்லை.

சமூக இடைவெளி

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது பெரம்பலூரில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளின் முன்பு, அதன் உரிமையாளர்கள் வட்டமிட்டு, அதில் பொதுமக்கள் நின்று சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து பொருட்களை வாங்கிச்சென்றனர். ஆனால் இந்த ஆண்டு பெரம்பலூர் உழவர் சந்தை முன்பும், அருகேயும் காய்கறி கடைகள் சமூக இடைவெளி இல்லாமல் அமைக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது. அங்கு காய்கறிகள் வாங்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. இதேபோல் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட், மளிகை கடைகள், மீன், இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நிற்கின்றனர்.

சாலையில் சுற்றித்திரிகின்றனர்

தற்போது கொரோனா 2-வது அலை உயிருக்கு ஆபத்தாக இருப்பது தெரிந்தும் நகர்ப்பகுதியில் சாலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களை போலீசார் எச்சரித்தும், அதனை அவர்கள் பொருட்படுத்தாமல் சுற்றித்திரிகின்றனர்.

காலை 10 மணிக்கு பிறகும் சாலையில் எப்போதும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வந்த வண்ணம் உள்ளன. வங்கிகள் முன்பும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி விட்டு நிற்காமல், ஒருவர் பின் ஒருவர் ஒட்டியவாறு நிற்கின்றனர்.

கொரோனா அதிகரிக்க வாய்ப்பு

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பெயரளவுக்கே அபராதம் விதித்து கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனர். ஏற்கனவே பெரம்பலூர் நகர்ப்பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காததால் இன்னும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் பெரம்பலூரில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதித்து, கடுமையாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: