வாக்கு எண்ணும் மையத்திற்கு

வாக்கு எண்ணும் மையத்திற்கு கொரோனா இல்லை என்ற சான்றுடன் வர வேண்டும்.

394

வாக்கு எண்ணும் மையத்திற்கு கொரோனா இல்லை என்ற சான்றுடன் வர வேண்டும்.

பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றுடன் வேட்பாளர்கள்- முகவர்கள் வர வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்கப்பட வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வருகிற 2-ந்தேதி எண்ணப்படுகிறது.

தலா 14 மேஜைகள்

பெரம்பலூர், குன்னம் ஆகிய 2 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் மையத்தில் தலா 14 வாக்கு எண்ணும் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 4 மேஜைகள் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு பணியாளர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கும் எண்ணும் மையத்திற்கு வரும் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் தவறாமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர் என்ற சான்று பெற்று வர வேண்டும். இதற்காக வருகிற 28, 29-ந் தேதிகளில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் சிறப்பு பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு, அனைத்து வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளரின் முகவர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்படவுள்ளது.

செல்போன் கொண்டு வர அனுமதியில்லை

வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்களின் முகவர்கள் காலை 7 மணிக்குள் வரவேண்டும். அவர்கள் கொரோனா தொற்று இல்லை என்ற மருத்துவ சான்று இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு வருகை தரும் அனைத்து நபர்களும் கட்டாயமாக அடையாள அட்டை, முக கவசம், கையுறை அணிந்து வர வேண்டும். செல்போன் மற்றும் கூர்மையான பொருட்கள் ஏதும் எடுத்து வர அனுமதியில்லை.

காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து வேட்பாளர்களும், அவர்களின் முகவர்களும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடித்து வாக்கு எண்ணிக்கையை சுமுகமாக நடத்திட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரியும், கூடுதல் தேர்தல் அலுவலருமான ராஜேந்திரன், சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பத்மஜா (பெரம்பலூர்), சங்கர் (குன்னம்), மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மீனாட்சி சுந்தரம், முதன்மை உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சின்னதுரை, கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி




%d bloggers like this: