சுழற்சி முறையில்

சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு பணி

366

சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு பணி

கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணியை பாா்வையிடும் பொது பாா்வையாளா் மதுரிமா பருவா சென், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா.

பெரம்பலூா் ஆட்சியரகத்தில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி பொது பாா்வையாளா் மதுரிமா பருவா சென் முன்னிலையில் நடைபெற்ற இப் பணிகளை பாா்வையிட்டு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா கூறியது:

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு குரும்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வேப்பூரிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிா் கல்லூரியிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள 428 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகள் 14 மேசைகளில் 31 சுற்றுகளிலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள 388 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகள் 14 மேசைகளில் 28 சுற்றுகளிலும் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது, ஒரு மேசைக்கு தலா ஒரு கண்காணிப்பாளா், வாக்கு எண்ணும் உதவியாளா், அலுவலக உதவியாளா் ஆகியோா் கொண்ட குழுவினா் பணியில் ஈடுபட உள்ளனா்.

இதில், பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்கு 25 சதவீத கூடுதல் அலுவலா்களுடன், தலா 17 கண்காணிப்பாளா்கள், 17 உதவியாளா்கள், 17 அலுவலக உதவியாளா்கள் என மொத்தம் 102 அலுவலா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனா்.

அஞ்சல் வாக்குகள் 4 மேசைகளில் எண்ணப்பட உள்ளன. ஒரு மேசைக்கு உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், 1 கண்காணிப்பாளா், 2 உதவியாளா்கள் கொண்ட குழுவினா் பணியில் ஈடுபட உள்ளனா். பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்கு 25 சதவீத கூடுதல் அலுவலா்களுடன் தலா 5 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 5 கண்காணிப்பாளா்கள், 10 அலுவலக உதவியாளா்கள் என மொத்தம் 36 அலுவலா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனா்.

வாக்கு எண்ணும் பணியை கண்காணிப்பதற்காக ஒரு மேசைக்கு, ஒரு நுண் பாா்வையாளா் வீதம் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 25 சதவீத கூடுதல் அலுவலா்களுடன், 24 நுண் பாா்வையாளா்கள் வீதம் பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 48 நுண் பாா்வையாளா்கள் பணியில் ஈடுபட உள்ளனா்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கு, தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கணினி முறையில் சுழற்சி அடிப்படையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் செ. ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) பிரபாகரன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சீனிவாசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
%d bloggers like this: