பெரம்பலூர் தொகுதியில் 20 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடியில் எந்திரங்கள் கோளாறு – வாக்குப்பதிவு தாமதம்

பெரம்பலூர் தொகுதியில் 20 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடியில் எந்திரங்கள் கோளாறு – வாக்குப்பதிவு தாமதம்


20-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப் பதிவு தாமதமாக தொடங்கியது.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 1,644 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், செங்குணம், தண்ணீர்பந்தல், அன்னமங்கலம், நாட்டார்மங்கலம், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு தொடங்கிய போது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்காளர்கள் பொத்தானை அழுத்தியபோது, லைட் எரியவில்லை. பீப் சத்தமும் வரவில்லை.

இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் எந்திரத்தை பரிசோதித்து சரி செய்தனர். இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சிறிது நேரம் தாமதமாக தொடங்கியது. எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவியுடன் சரியாக இணைக் கப்படாததால் பிரச்சினை ஏற்பட்டது என வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர். செங்குணத்தில் வாக்குச்சாவடியில் அந்த வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடியில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா சு.ஆடுதுறை பகுதி சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டவையாகும். சு.ஆடுதுறை வாக்குச்சாவடியில் சுமார் 400 ஓட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியிருந்தபோது பழுதானது. இதுகுறித்து அந்த மையங்களில் இருந்த அரசியல் கட்சியினரின் பூத் ஏஜெண்டுகள் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ‘சீல்‘ வைத்த அதிகாரிகள், மற்றொரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தினர். வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்கு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இருமுறை போய்வந்ததாக கூறப்படுகிறது. இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கண்டித்தனர். இதையடுத்து அந்த வாக்குச்சாவடிக்கு தி.மு.க. நிர்வாகிகள் கூட்டமாக சென்றதை கண்டுகொள்ளாமல் இருந்த போலீசாரிடம், நாம் தமிழர் கட்சி நிர்வாகி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது உயர் போலீஸ் அதிகாரி, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததுடன், தி.மு.க. நிர்வாகிகளையும் வெளியே அனுப்பினார்.
மேலும் வேப்பந்தட்டை தாலுகா வெங்கலம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

197total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: