வறட்சியிலும் வளரும் நாட்டுக் கம்பு

வறட்சியிலும் வளரும் நாட்டுக் கம்பு


மாடுகளுக்கு சரிவிகித உணவில் உலர் தீவனமும் மிக முக்கியமானது. ஆனால், உலர் தீவனமான வைக்கோலுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு உருவாகி வருகிறது. இதற்கு முன்பு 60 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கட்டு வைக்கோல், தற்போது 200 ரூபாயை நெருங்கி விட்டது.

இதற்கு காரணம் நெல் சாகுபடிப் பரப்பு குறைந்து போனதுதான். காவிரி தண்ணீர் கிடைக்காததால், இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலத்தில் நடைபெறவிருந்த குறுவை சாகுபடி கைவிடப்பட்டது.

இதனால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதோடு கால்நடைகளுக்குத் தேவையான வைக்கோலுக்கும் கடும் தட்டுப்பாடு உருவானது. தற்போது சம்பா சாகுபடிக்கும் போதிய அளவு தண்ணீர் கிடைக்காத சூழல் உருவாகியிருப்பதால், விவசாயிகள் பலர் தங்களது நிலங்களை தரிசாகவேப் போட்டு வைத்துள்ளனர். இதனால், வைக்கோல் தட்டுப்பாடு மேலும் அதிகரித்து வருகிறது.

இதற்கு மாற்றாக நாட்டுக் கம்பு சாகுபடி செய்து அதன் தட்டையை உலர் தீவனமாக மாடுகளுக்கு கொடுக்கலாம் என வழிகாட்டுகிறார், தஞ்சாவூர் மாவட்டம், தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்த ‘முன்னோடி இயற்கை விவசாயி’ பாஸ்கரன்.

“நிலத்தை தரிசாகப் போட்டு வைத்தால் அதிகளவில் களைகள் மண்டுவதோடு  மண் இறுகி விடும். இதனால், அடுத்த  சாகுபடியின் போது மண்ணை பொலபொலப்பாக்க அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால், நிலத்தை தரிசாக விடாமல், நாட்டுக் கம்பு விதைப்பது, பல வகைகளில் விவசாயிகளுக்கு கைகொடுக்கும்.

இந்த நாட்டுக் கம்புக்கு மண்ணில் உள்ள கால்சியம் சத்து மட்டுமே போதுமானது. அதிக தண்ணீர் தேவையில்லை.  பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலும் இருக்காது. இடுபொருட்களும் அதிகம் தேவைப்படாது. மண்ணில் லேசான ஈரம் இருந்தாலே போதும். 2 சால் புழுதி உழவு ஓட்டி ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோ வரை நாட்டுக்கம்பு விதையை தெளிக்கலாம். மண் வளம் குறைந்திருந்தால், 100 கிலோ மண்புழு உரத்தை அடியுரமாக இடலாம்.

மாதம் ஒரு மழை கிடைத்தாலே நாட்டுக் கம்பு நன்கு வளர்ந்துவிடும். 30 நாட்களில் பூத்து 40 நாட்களில் கதிர் பிடித்து விடும். 50 நாட்களில் மணி பிடித்து 80 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். ஒரு ஏக்கரில் 300 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ நாட்டுக்கம்பின் தற்போதைய விலை 35 ரூபாய். அதோடு, இதன் தட்டைகளைக் காய வைத்து, ஆண்டு முழுவதும் மாடுகளுக்கு உலர் தீவனமாகக் கொடுக்கலாம். வைக்கோலை விட இதில் சத்துக்கள் அதிகம்” என்றார் பாஸ்கரன்.

மேலும் தொடர்ந்த அவர், “வறட்சியிலும் வளரும் நாட்டுக் கம்பை சாகுபடி செய்வதன் மூலம், மண்ணையும் இறுக விடாமல் செய்யலாம். மாடுகளுக்கு உலர் தீவனப் பிரச்னையும் தீரும். அதோடு நல்ல வருமானமும் கிடைக்கும். நாட்டுக் கம்பு வெந்தய வடிவில் தட்டையாக இருக்கும். சீரகத்தை விட பெரியதாக இருக்கும். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாட்டுக் கம்பு விதை கிடைக்கிறது. நாட்டுக் கம்பு சாகுபடி முடிந்த பிறகு, எள், கேழ்வரகு ஆகியவற்றை சுழற்சி முறையில் சாகுபடி செய்யலாம்” என்றார்.

நன்றி: பசுமை விகடன்

325total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: