The desire to go back to school ...!

மீண்டும் பள்ளிக்கூடம் செல்ல ஆசைதான்…!

1002

மீண்டும் பள்ளிக்கூடம் செல்ல ஆசைதான்…!


The desire to go back to school …!


பள்ளிக்கூடம் எப்போது திறப்பார்கள் என்று பெற்றோர்கள் நினைக்கும் இந்த நேரத்தில். பள்ளி திறக்க போறாங்களா? என்கிற வருத்தம் பல மாணவர்களிடத்தில் இருக்கும் இந்த கொரோனா காலத்தில் பழைய நினைவுகள்…

என்ன நான் நடத்திய பாடம் புரிஞ்சுதா? என்று ஆசிரியர் கேட்பதைப் பள்ளி சென்ற ஒவ்வொருவரும் கேட்டிருப்போம். பள்ளி பருவம் என்றாலே நம் நினைவுக்குப் பல சந்தோஷ நினைவுகள் வரிசையாக வந்து நிற்கும். ஒவ்வொன்றாய் அசைபோட்டால் அவ்வளவு குதூகலமாக இருக்கும். இறுதியில் அதெல்லாம் ஒரு காலம் என்று தொண்டையை கனைத்துக் கொண்டு இன்றைய பிரச்சனைகளைப் பார்க்கக் கிளம்பிவிடுவோம்.

பாடங்களைப் படிக்க மட்டுமா நம்மை நம் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்பினார்கள். இல்லை, ஒழுக்கம், ஒற்றுமை, சகோதரத்துவம், ஜாதி, மதம் என்று வேறுபாடு பார்க்காமல், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று ஒதுங்கி நிற்காமல் ஒன்றாகப் பழகுவதற்கும், அதோடு புத்தக பாடங்களை படிப்பதற்கான வாய்ப்பு அங்கு இருந்தது. அதை நாம் கற்றுக் கொள்ள நம்மைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள்.

அந்த வயதில் பள்ளிக்கூட வீட்டுப்பாடம் எழுதவில்லையென்றால் ஆசிரியர் அடிப்பாரே என்ற பயத்தை தவிர வேறு ஏதும் பெரிய கவலை இருப்பதில்லை.

ஆசிரியர்கள்

பள்ளிப் பருவம் முடிவதற்குள் எத்தனை விதமான ஆசான்கள். பயங்கர டெரரான ஆசிரியர், டெரரா பயங்கரமான ஆசிரியர், பாசத்தை காட்டும் ஆசான்கள், பரிந்து பேசும் ஆசிரியைகள், விளையாடக் கூப்பிடும் ஆசிரியர், 100 மதிப்பெண் தவிர 99 மதிப்பெண் எடுத்தாலும் அடிக்கும் ஆசிரியர் என்று எத்தனை விதமான குருநாதர்களை நம் பள்ளிப் பருவத்தில் கண்டிருப்போம்.

இன்றும் அந்த ஆசான்களை பார்க்கும் போது நீண்ட நாட்களாகப் பிரிந்த நண்பனைக் கண்ட மகிழ்ச்சி நம்முள் உண்டாகிறது. அவர்கள் நீ என்னிடம் படித்தாயா? என்று கேட்கும் போது வரும் நெகிழ்ச்சி. அவர்களுடைய கையை இருக்கமாக பற்றிப்பிடித்து ஆமாம் சார் உங்களிடம் தான் படித்தேன் என்று சொல்லும் போது உண்டாகும் சந்தோஷம் ஒரு சிலருக்குத்தான் கிடைக்கும்.

வில்லன்களாக சில ஆசிரியர்கள்

சில ஆசிரியர்கள் வில்லன்களாகவே இருந்திருப்பார்கள். அவர்களை பெரும்பாலும் யாரும் ரசிப்பதில்லை. ஆனால் சில ஆசிரியர்கள் கோமாளித்தனமாக மாணவர்களிடம் நடந்து கொள்வதும் உண்டு. அப்படி ஒரு ஆசிரியர் நான் படிக்கும் காலத்திலிருந்தார். அவரிடம் “ஏன் சார் மாணவர்களிடம் இப்படி நடந்து கொள்கிறீர்கள் அவர்கள் உங்களை எவ்வளவு கேலியும் கிண்டலும் செய்கிறார்கள் கொஞ்சம் ஸ்டிரிக்டா இருங்க சார்” என்று கூறிய சக ஆசிரியரிடம் “சார் நீங்கள் சொல்வது போல நான் ஸ்டிரிக்டாக இருந்தால் என்னிடம் ஒரு மாணவனும் படிக்க மாட்டான். அவன் வாழ்க்கை வீணா போய்விடும். ஏன் நீங்களே என்னிடம் இப்படிப் பேச முடியாது. இந்த மாணவப் பருவம் இப்படித்தான் சார் இருக்கும். நீங்களும் என்னைப் போல ஜாலியா மாணவர்களிடம் கலந்து பேசுங்கள் சார்” என்று சொல்லிக் கொண்டே கடந்து சென்றார் அந்த தமிழாசான். ஆமாம் அந்த பருவம் அப்படிப்பட்ட பருவம் தானே மாணவர்களைச் சரியாக படித்த ஆசிரியர் அவர். யாரிடமும் தனது வகுப்பு மாணவர்களை விட்டுக் கொடுக்க மாட்டார். அவருடைய உடல் மொழியும் மீசையும் இன்றளவும் மறக்க முடியவில்லை.

அதே போல,பள்ளிக்கூட காலத்தில் ஏற்படும் சில நட்புகள் எந்த காலத்திலும் விட்டுப் போகாது. எந்த வயதானாலும் என்னடா எப்படி இறுக்கே என்று உரிமையுடன் கேட்க வைக்கும் நட்பாக அது இருக்கும்.

பிரிவும் எதிர்பார்ப்பும்

உயர் பள்ளிப் படிப்பின் இறுதியாண்டில் ஒருவரை விட்டு ஒருவர் பிரியும் போது உண்டாகும் சோகம் லேசானதாக இருக்கும். ஏனென்றால் அந்த வயது அப்படி மற்ற எதையோ புதியதாகப் பார்க்கப் போகிறோம். புதியதாகப் படிக்க போகிறோம். புதிய நண்பர்களுடன் பழகப் போகிறோம் என்று ஆசை இருக்கும். ஆனால் சில நாட்களிலேயே அந்த ஆசை சிலருக்கு நிராசையாகவே அமைந்து விடும்.

அதுதான் வாழ்க்கை, ஒரு பருவத்தில் இருக்கும் போது அந்த பருவம் நமக்கு கசக்கிறது. அந்த பருவம் தாண்டியதும் பழைய பருவத்திலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பள்ளிப் பருவம் பல பாடங்களை நமக்கு தந்தது. மீண்டும் அந்த பாடங்களைப் படிக்கப் பள்ளிக்கூடம் செல்ல ஆசைதான் ஆனால் வயசாகிவிட்டதே.

keyword: பள்ளிக்கூடம், ஆசிரியர்




%d bloggers like this: