மின் குறைபாடுகளை சரி செய்வதற்கு கூடுதல் பணியாளர்களை சேர்க்கவேண்டும்.

மின் குறைபாடுகளை சரி செய்வதற்கு கூடுதல் பணியாளர்களை சேர்க்கவேண்டும்.


252 கிராமங்களின் மின் குறைபாடுகளை சரி செய்ய 119 பேர் மட்டுமே உள்ளனர் என்று பெரம்பலூரில் நடந்த மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் குற்றம் சாட்டினார்.

பெரம்பலூரில் மாவட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு மின்வாரிய பெரம்பலூர் (வடக்கு) மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமை வகித்தார். பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் பிரகாசம் வரவேற்றார். செயற்பொறியாளர்கள் (பொது) சேகர், (மின் அளவி பரிசோதனை) மேகலா முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் எந்தநேரம் மின்சாரம் வரும், நிற்கும் என விவசாயிகளுக்கும், மின் நுகர்வோர்களுக்கும் தெரியாத வகையில் அடிக்கடி மின்தடையுடன் கடந்த 40 நாட்களாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். வறட்சி நேரத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் கிணற்றில் இருக்கும் நீரை இறைக்க முடியாமல் மின் விநியோகம் செய்யப்படும் நேரம் தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மின்சாரம் வருவது பற்றி மின்நுகர்வோருக்கு தெரிவித்து அறிவிப்பு செய்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மின் நுகர்வோர் மற்றும் விவசாயிகள் 6ம் தேதி முதல் 24 மணி நேரமும் தானியங்கி மின்தடை புகார் மையம் மூலம் மின்விநியோக குளறுபடி, கோளாறுகளை புகாராக பதிவு செய்யலாம் என்ற செயல்பாட்டை வரவேற்கிறோம், அதேநேரம் பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட 252 கிராம மக்கள் தெரிவிக்கும் புகார்களை சரி செய்ய குறைந்தபட்சம் ஊருக்கு இருவர் என 502 பேர்களாவது பணியில் இருக்க வேண்டும். தற்போது கம்பியர் 41பேர், உதவியாளர் 78 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். பல்வேறு மின்வாரிய காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமலேயே உள்ளது. உடனுக்குடன் மின்தடைகளை சரி செய்ய தேவையான ஆட்களை விரைந்து நியமிக்க வேண்டும்.

வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர், தழுதாழை, அ.மேட்டூர், மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், வெட்டுவால்மேடு, கவுண்டர்பாளையம், சின்னமுட்லு பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் அடித்த சூறாவளி காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்தும், கம்பிகள் தாழ்வாக கைக்கு எட்டுகிற வாகனங்களில் உரசி தீவிபத்து ஏற்படுகிற உயரத்தில் தொங்கி கொண்டும் உள்ளது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற குறைகளை விரைந்து தீர்க்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.கூட்டத்தில் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர்கள் (நகர்) மாணிக்கம், (கிராமியம்) முத்தமிழ்ச்செல்வன், இதர உதவி செயற்பொறியாளர்கள் கிருஷ்ணாபுரம் கலியபெருமாள், சிறுவாச்சூர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினகரன்


மேலும் மாவட்ட செய்திகள் வாசிக்க – பெரம்பலூர் மாவட்ட செய்திகள்


Leave a Reply

%d bloggers like this: