மின் கட்டணத்தை செலுத்த புதிய வசதி அறிமுகம்

 மின் கட்டணத்தை செலுத்துவதற்கு “பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்’ (பிபிபிஎஸ்) என்ற புதிய வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கி வரும் பிஓஸ், பற்று, வரவு அட்டைகள், வலைதள வங்கியல், செல்லிடப்பேசி செயலி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் தற்போது கூடுதலாக “பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்’ (பிபிபிஎஸ்) வழியாக மின்கட்டணம் செலுத்தும் வசதியை திங்கள்கிழமை (பிப்.26) அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியால் வடிவமைக்கப்பட்டு தேசிய பணம் செலுத்தும் கழகத்தால் (என்பிசிஐ) செயல்படுத்தப்பட்ட பிபிபிஎஸ் முறை ஒரே தளத்தில் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பன்முக வழிகளில் இணைந்து பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதியுடன், பணப் பரிவர்த்தனைக்கு நம்பிக்கை, பாதுகாப்பை வழங்கக் கூடியதாக இருக்கும்.

இந்த முறையின் கீழ் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்கள் இயங்குகின்றனர். மின் கட்டணத்தை “பாரத் பில் பே’-இன் கீழுள்ள அனைத்து வங்கிகளின் எல்லா முறைகளிலும் (mode) செலுத்தலாம்.

பிபிபிஎஸ்-இல் மின்கட்டணத்தை வசூலிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் biller bank ஆக செயல்படும். மின்நுகர்வோர் எந்த வங்கியின் பிபிபிஎஸ் பேமென்ட் சிஸ்டத்தில் நுழைந்தாலும், “டான்ஜெட்கோ’ biller-ஆக இருப்பது காண்பிக்கும். மின்நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகையைக் கண்டறிந்து பணம் செலுத்தலாம்.

இந்த முறையின் கீழ் இணைய வழியாக மின்கட்டணம் செலுத்த கட்டணம் ஏதும் இல்லை என அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply

%d bloggers like this: