வேப்பந்தட்டை அருகே மானை வேட்டையாடிவரை காவல் துறையினர் கைது செய்தனர்

Hits: 12

வேப்பந்தட்டை அருகே மானை வேட்டையாடிவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வேப்பந்தட்டை அருகே மானை வேட்டையாடிவரை காவல்துறையினர் கைது செய்தனர், அவரிடம் இருந்த மூன்று நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வெண்பாவூர் வனப்பகுதியில் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட காப்புக் காடுகள் உள்ளன. இந்த பகுதியில் மான்கள் மற்றும் காட்டு பன்றிகள் ஏராளமாக உள்ளன.
மான் வேட்டையாடும் கும்பல் சிலர் அவ்வப்போது இந்த வனப்பகுதியில் மானை வேட்டையாடி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கை.களத்தூர் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வெண்பாவூருக்கும் – கிருஷ்ணாபுரத்திற்கும் இடையே ஒரு கும்பல் ஒரு மானை வேட்டையாடி விட்டு வந்து கொண்டிருந்தனர். அவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடிக்க முயன்றபோது, ஒருவர் தவிற மற்ற 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

அப்போது கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு மான் மற்றும் 3 நாட்டுத் துப்பாக்கிகள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மான் வேட்டையாடப் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.  சிக்கிக் கொண்டவரிடம் விசாரித்தபோது, அவர் அன்னமங்கலத்தைச் சேர்ந்த மதலைமுத்து(வயது 54) என்பதும், அவருடன் மான் வேட்டையில் ஈடுபட்டது ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜோசப்(40), பெரிய வடகரை ஜமால்(30), வெண்பாவூர் தமிழ்(25), வெங்கலம் ரவி(30), அதே ஊரைச் சேர்ந்த மணி(30) என்பதும் தெரிய வந்தது.

பின்னர் காவல்துறையினர் இறந்து கிடந்த மான் மற்றும் 3 நாட்டுத் துப்பாக்கிகள், 3 மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்து அவைகளை வேப்பந்தட்டை வனச்சரக அலுவலர் குமாரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து வனச்சரக அலுவலர் குமார் மற்றும் வனத்துறையினர் வழக்குப்பதிந்து மதலைமுத்துவை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் தப்பி ஓடிய 5 பேரை வனத்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.


source: தினத்தந்திLeave a Reply