மானாவாரி நிலங்களில் மகசூலை அதிகரிக்க சில வழிமுறைகள்.

630

மானாவாரி நிலங்களில் மகசூலை அதிகரிக்க சில வழிமுறைகள்.

உழவு, விதை நேர்த்தி, உரம், களை மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மானாவாரி நிலங்களில் மகசூலை அதிகரிக்கலாம் என வேளாண் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நாமக்கல் பிஜிபி வேளாண்மை கல்லூரி உதவிப் பேராசிரியர் ப.சவிதா, முதன்மையர் நெ.உ.கோபால் ஆகியோர் தெரிவித்தது: மழையும், மண்ணில் உள்ள ஈரப் பதத்தினையும் கொண்டு, மழைப்பொழிவு மிதமாக உள்ள நிலங்களில் செய்யப்படும் சாகுபடி மானாவாரி சாகுபடி என வகைப்படுத்தப்படுகிறது.

மானாவாரி நிலங்களில் ஆண்டு மழையளவு சராசரியாக 800 மி.மீ.க்கு குறைவாகவே இருக்கும். எனவே, மானாவாரி நிலங்களில் பயிரிடப்படும் பயிர் வகைகள் வறட்சியைத் தாங்கிக் கொண்டு வளரும். இத்தகைய மானாவாரி நிலங்களில் அதிக மகசூலைப் பெற்றிட உதவும் நவீன முறைகளைச் செயல்படுத்தலாம்.

கோடை மழை ஈரத்தில் உழவு செய்வதால் மேல்மண்ணானது மிருதுவான தன்மையைப் பெறுகிறது. இதனால் மண் துகளானது மழை நீரினை உறிஞ்சி நிலத்துக்குள் ஈரத்தைத் தக்க வைக்க ஏதுவாகிறது. சேமிக்கும் நீரானது பயிர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மழைக் காலங்களில் நிலங்களில் சரிவுக்குக் குறுக்கே உழுவதால், உழவுச் சால்களில் மழைநீர் தேங்கி மண்ணுக்குள் செல்கிறது. இதனால் மண்ணரிப்பைத் தடுக்கலாம். மேலும், களைகள், களைகளின் விதைகள், பயிரினைத் தாக்கும் பூச்சிகளும், பூச்சி முட்டைகளும் அழிக்கப்படுகின்றன.
ஆழ உழுதல்: இரும்புக் கலப்பையினால் தொடர்ந்து நிலத்தினை உழும்போது அடியிலுள்ள மண் கடினப் பகுதி ஏற்படும். இதனால் குறிப்பிடப்பட்ட ஆழத்துக்குக் கீழ் மழைநீர் கசியமுடியாத நிலை தோன்றுகிறது. இதனைக் குறைக்க உளிக் கலப்பையால் ஒரு மீட்டர் இடைவெளியில் ஆழமாக உழுவதினால் மண்ணின் மிருதுத் தன்மை அதிகரிக்கும், மழை நீரும் சேமிக்கப்படும்.

ஆழச்சால் அகலப் பாத்தி: மண்ணின் சரிவு குறைவாகக் காணப்படும் மானாவாரி நிலங்களில் இவ் வகை அகலப் பாத்திகளை அமைக்கலாம். இதன் அளவானது 30 செ.மீ. அகலம், 15 செ.மீ. ஆழத்தில் வடி வாய்க்காலும், 120 செ.மீ. அகலத்தில் மேட்டுப் பாத்தியும் இருக்குமாறு அமைப்பது ஆழச்சால் அகலப்பாத்தி ஆகும். அதிக மழைப் பொழிவு நிகழும் காலங்களில், ஆழச்சாலில் சேமிக்கப்படும் மழைநீர், அகலப் பாத்திகளில் உள்ள பயிர்களின் வேர்களுக்கு ஊடுருவல் முறையில் கிடைத்து, பயிர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

சம மட்ட வரப்புகள்: சரிவான பகுதிகளின் குறுக்கே சமமட்ட வரப்புகளை அமைக்க வேண்டும். சம மட்ட வரப்புகள் மழை நீர் வழிந்து வீணாவதைத் தடுக்கும். வரப்பின் இருபுறமும் வெட்டி வேரினை நடுவதால், மண்ணரிப்பும், வரப்பானது அருகம்புல் போன்ற புல் வகைகள் இருப்பதால் நாளடைவில் இடிந்து விழுவதும் தடுக்கப்படும்.

விதைகளைக் கடினப்படுத்துதல்: விதைகளை தகுந்த கரைசலில் ஊற வைத்து சாதாரண ஈரப்பத நிலைக்கு உலரச் செய்து விதைகளை விதைப்பதற்கு முன்பு கடினப்படுத்தி விதைப்பது விதைகளைக் கடினப்படுத்துதல் எனப்படும். இதனால் விதைகளின் முளைப்புத்திறன் சிறப்பாகவும், வீரியமாகவும், வறட்சியைத் தாங்கி அதிக விளைச்சல் கிடைக்கும்.

பருவ மழைக்கு முன் விதைத்தல்: பருவமழை குறித்த காலங்களில் பெய்யாவிட்டால் நல்ல விளைச்சல் கிடைக்காது. மழை பொழியும் சூழ்நிலை தெரிந்ததும் வேளாண் சாகுபடி செய்து விதைத்து விட்டால், கிடைக்கும் மழைநீர் முழுவதும் பயிர்களின் வளர்ச்சிக்குப் பயன்படும்.
நுண்ணுயிர் உரங்களைப் பயன்படுத்துதல்: விதைப்பதற்கு முன்பு நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியாவை அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். பயறு வகைகளுக்கு ரைசோபியத்தைப் பயன்படுத்த வேண்டும்.

விதைக்கும் கருவியைப் பயன்படுத்துதல்: விதைக்கும் கருவிகளை உபயோகப்படுத்தி விதைப்பதால் தகுந்த ஆழத்தில் விதைகள் விழுவதால் நன்கு முளைக்கும். மேலும் பறவைகள் போன்ற உயிரினங்களிடம் இருந்தும் விதைகள் காக்கப்படும். மேலும், மண்ணிலுள்ள சத்துகளும் வளரும் பயிர்களுக்கு எளிதாகக் கிடைக்கும்.

பயிர்களின் எண்ணிக்கையைப் பராமரித்தல்: பயிர்களின் எண்ணிக்கை நெருக்கமாக இருப்பதால், பயிர்களுக்கு ஈரப் பதமும், காற்றோட்டமும், தகுந்த ஊட்டச் சத்துகளும் கிடைக்கும். இதனால் அதிக மகசூலினைப் பெறலாம்.

நிலப் பாதுகாப்பு போர்வை அமைத்தல்: மண்ணில் காணப்படும் நுண்ணுயிர்களைப் பாதுகாக்கவும், மண்ணில் உள்ள நீர் ஆவியாதலைத் தடுக்கவும், களைகளைத் தடுக்கவும் பயிரில் உள்ள கழிவுகளைக் கொண்டு நிலப் போர்வை அமைக்கப்படுகிறது.

களைகள் கட்டுப்பாடு: ஈரம் குறைந்த நிலங்களில் பயிர்களுக்குப் போட்டியாக களைகளும் வளர்கின்றன. இதனால் மண்ணில் உள்ள ஈரப் பதத்தின் சதவீதம் குறையும். இதனைத் தடுக்க தக்க சமயத்தில் களையெடுக்க வேண்டும். களைக்கொல்லியைப் பயன்படுத்தி, தகுந்த களை நீக்கும் கருவிகளைப் பயன்படுத்தி களைகளை நீக்கலாம். இத்தகைய தொழில்நுட்பங்களை மானாவாரி நிலங்களில் பயன்படுத்துவதன் மூலம் அதிக விளைச்சலைப் பெறலாம்.
%d bloggers like this: