வேப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் அவதிப்படும் நோயாளிகள்

Hits: 459

வேப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் அவதிப்படும் நோயாளிகள்.

வேப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மருத்துவ உபகரணங்கள் இருந்தும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூரில் இயங்கி வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 13 ஆண்டுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டு, வேப்பூர் வட்டார பகுதி கிராமங்களுக்கு பொது மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. இந்த அரசு பொது மருத்துவ மனைக்கு வேப்பூர், புதுவேட்டக்குடி, நன்னை, சாத்தநத்தம், கல்லை, ஒலைப்பாடி, வயலப்பாடி, பரவாய், கல்லம்புதூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது இம் மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க எம்.டி. பட்டம் பெற்ற மருத்துவர், பொது நல மருத்துவர், மகளிர் சிறப்பு மருத்துவர் என 3 பேர் மட்டும் பணிபுரிகின்றனர். ஏற்கனவே பணி புரிந்த பல் மருத்துவர் மேல் படிப்பிற்காக சென்று விட்டார். 9 மருத்துவர்கள் பணி புரிந்த மருத்துவமனையில் தற்போது 3 மருத்துவர்கள் மட்டும் பணி புரிகின்றனர். இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் அங்கு பணி புரியும் மருத்துவர்கள் அதிகளவில் வரும் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறப் படுகிறது.
பணிக்கு வரும் மருத்துவர்கள் சில நாட்கள் மீட்டிங் உள்ளது என்று கூறி சிறிது நேரத்திலேயே சென்று விடுகின்றனர். பல நாட்கள் 2 மருத்துவர்கள் மட்டுமே மருத்துவம் செய்கின்றனர். தினமும் 40-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் வந்து செல்கின்றனர். பிரசவ காலத்தில் பிரசவம்பார்ப்பதற்கு அனைத்து உபகரணங்கள் இருந்தும் மருத்துவர்கள் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் அடிதடி, விபத்து என மருத்துவமனைக்கு வந்தால் எக்ஸ்ரே எடுப்பதற்கு உபகரணம் இருந்து பணியாளர் இல்லாததால் பயனற்று உள்ளது. இதனால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நிலையே உள்ளது. இரவு நேரம் மற்றும் அவசர நிலைக்கு 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள பெரம்பலூர், அரியலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது சிலர் செல்லும் வழியிலே உயிர் இழந்து விடுகின்றனர். பணிக்கு வரும் மருத்துவர்கள் காலை 8 மணிக்கு வந்தால் மாலை தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் ஆனால் இங்கு மதியமே மருத்துவர்கள் சென்று விடுகின்றனர் என கூறப்படுகிறது. அதன் பின்னர் வரும் நோயாளிகள் மருத்துவர் இல்லாததால் மாத்திரை மட்டுமே வாங்கி செல்கின்றனர்.

மருத்துவமனையில் கழிவறையை சரிவர சுத்தம் செய்யாததால் துர்நாற்றம் வீசுகிறது. இம்மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் தங்கி மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது உத்தரவு ஆனால் தற்போதைய நிலை வேறு. இரவு நேரங்களில் செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். இது சம்பந்தமாக பல முறை மனு கொடுத்தும் பலன் இல்லை. மேலும் வேப்பூர் கிராம மக்கள் உடனடியாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என கண்டன போஸ்டர்களையும் ஒட்டி எதிர்ப்பை தெரி வித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் வேப்பூரில் உள்ள மருத்துவமனையை உடனடியாக ஆய்வு செய்து போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்றும், பயனற்று உள்ள மருத்துவ உபகரணங்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Leave a Reply