மரத்தடி ஜூஸ்… மக்களே உஷாரா இருங்க!

மரத்தடி ஜூஸ்… மக்களே உஷாரா இருங்க!


வெயிலுக்கு இதம் தருவது திரவ உணவுகள்தான். அதிலும் குறிப்பாக, சுள்ளென்று அடிக்கும் வெயிலுக்கு, வழியில் ஒரு மரம் கிடைத்தால், போன உயிர் திரும்பி வந்தது போல் இளைப்பாறுவோம். அதிலும் அந்த மரத்தடியில், ஒரு ஜூஸ் கடை இருந்தால்… இன்னும் ஆறுதல்தான் நமக்கு!

பயணங்களில் சூரியன் ஸ்ட்ரா போட்டு நம்மையே உறிஞ்சும் வெயில் காலம் இது. இதில் இருந்து தப்பிக்க, நாம் தஞ்சமடைவது சாலையோரங்களில் இருக்கும் பழச்சாறு கடைகளைத்தான்! சாத்துக்குடி, கரும்பு ஜூஸ் கடைகளில்தான்.

சாத்துக்குடியும், கரும்பும் வெயிலுக்கு நல்லது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதோடு கலக்கும் தண்ணீர் எந்த அளவுக்குச் சுத்தமானது என்பதற்கு யாரும் உத்தரவாதம் தர முடியாது.

கூடவே, அதில் கலக்கும் ஐஸ் கட்டிகள் எந்தத் தண்ணீரில் தயாரிக்கப்படுகின்றன என்பதும் தெரியாது. இந்தத் தண்ணீர் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தி, உடலில் நீர் இழப்பை இன்னும் இன்னுமாக ஏற்படுத்திவிடும்.

அவசியம் ஜூஸ் வேண்டும் எனில் ஐஸ் கட்டியையாவது தவிர்க்கலாம். சுத்தமான தண்ணீர் பாட்டில் ஒன்றை எப்போதும்  உடன் வைத்திருப்பது பலவிதங்களில் நன்மை தரும்.

சாலையோர ஜூஸ்கள் விலை மிகமிகக் குறைவுதான். உடனடி நிவாரணம்தான். வறண்டு போன நாக்கிற்கு, ஒரு சக்தியைத் தரும் என்பதிலெல்லாம் மாற்றுக் கருத்தே இல்லை. அதேசமயம், கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வுடன், எச்சரிக்கை உணர்வுடன் சாலையோர ஜூஸ் கடைகளை அணுகுங்கள்.

கொஞ்சம் இஞ்சி, கொஞ்சம் பெருங்காயம், கொஞ்சம் உப்பு, லேசாக கறிவேப்பிலை கொத்தமல்லியெல்லாம் போட்டு, ஒரு பாட்டிலில் வீட்டிலில் இருந்து மோர் எடுத்து வந்துவிடுங்கள். அந்த வெயிலே, உங்களிடம் மோர் கேட்கும்!

அதுமட்டுமா? நெல்லிக்காய், இஞ்சி, புதினா, மோர் கலந்து மிக்ஸியில் ஜூஸாக்கி, ஒரு பாட்டிலில் எடுத்து வந்து தாகம் எடுக்கும்போது அருந்துங்கள். தாகமும் தணியும். உடலில் சர்க்கரை முதலான தேவைகளும் இருந்துகொண்டே இருக்கும். கோடைக் கால செரிமானக் கோளாறு முதலான பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம்.

243total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: