மத்திய அரசின் கடன் ரூ.88 லட்சம் கோடியாக அதிகரிப்பு: நிதியமைச்சகம் தகவல்

மத்திய அரசின் கடன் ரூ.88 லட்சம் கோடியாக அதிகரிப்பு: நிதியமைச்சகம் தகவல்


மத்திய அரசின் கடன் மதிப்பு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.88.18 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் ரூ.84.68 லட்சம் கோடியாக இருந்தது.
நடப்பு 2019-20 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு அறிக்கையை மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மத்திய அரசின் கடன் ரூ.88.18 லட்சம் கோடியாக உள்ளது. இதில், 89.4 சதவீதம் பொதுக் கடன்களாகும். இதே காலகட்டத்தில், ரூ. 2.21 லட்சம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை மத்திய அரசு வெளியிட்டது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 1.44 லட்சம் கோடிக்குக் கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.

நடப்பு நிதியாண்டின் ஜூன் வரையிலான காலாண்டில், பண மேலாண்மை ரசீது (சிஎம்பி) மூலம் குறுகிய கால கடன் எதையும் மத்திய அரசு பெறவில்லை. இதே காலகட்டத்தில் ரூ.17,599.3 கோடி மதிப்பிலான ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், அந்நிய நேரடி முதலீடு ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தை ஒப்பிடுகையில் 51 சதவீதம் அதிகமாகும். கடந்த ஜூன் 28-ஆம் தேதி நிலவரப்படி, அந்நியச் செலாவணி கையிருப்பு 42,770 கோடி டாலராக இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி நிலவரப்படி, இது 40,610 கோடி டாலராக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply

%d bloggers like this: